முத்தமிழ் விழா மலர்

தமிழீழ தேசியத் தலைவர் தனது எண்ணவோட்டங்களை எப்பொழுதும் குறுகிய காலத்துக்குள்ளே முடக்கி விட்டதில்லை.

பரந்து விரிந்து கிடக்கும் நீண்ட கால ஓட்டத்துக்கான பார்வையையை தன் தீர்க்கதர்சனத்தினால் எம்முன்னே வைப்பவர்.

அவரின் தூரப்பார்வையும் தூர்க்கதர்சனமும் எமக்கு என்றும் தடைக்கற்களை உடைத்து படிக்கற்களாக நிமிர்ந்து நின்றது வரலாறு.

அவ்வாறான செயற்பாடுகளின் வெளிப்பாடு தான் தமிழீழ நிழல் அரசின் ஒவ்வொரு பிரிவுகளும். அவை மக்கள் பணிக்கான பிரிவுகளாகவும் இராணுவ, தொழில்நுட்ப கட்டமைப்புக்களாகவும் சர்வதேச நாடுகளுடனான ராசதந்திர உறவுகளுக்கான பிரிவுகளாகவும் உருவாக்கப்பட்டன. இதன் ஒரு அடிப்படை பிரிவு தான் “தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம்”

இதன் அடிப்படை நோக்கம் எமது கலைகளையும் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாப்பது. கலைபண்பாட்டு விழுமியங்களின் ஊடாக தமிழீழ விடுதலைப் போருக்காக வலுச் சேர்ப்பது.

அவ்வாறான செயற்பாடுகளை இறுதி வரை (2009 ) சரியாக செய்து வந்தது தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம். கவிஞர், புதுவை இரத்தினதுரை அவர்களின் பொறுப்பில் இயங்கிய இப் பிரிவு பல கலை செயற்பாடுகளின் தாய் பிரிவாக இருந்ததை மறுக்க முடியாது.

இதன் ஆரம்ப கால செயற்பாடுகளின் பெறுபேறாக உருவாக்கப்பட்ட பொத்தகமே இது. “முத்தமிழ்விழா மலர் “ என்ற பெயரில் வெளிவந்த இப் பொத்தகத்தை பெறுமதியானதாக்க வேண்டிய பெரும் கடமை எம்மிடம் இருக்கின்றது.

தேசியத் தலைவரின் ஆசியுரையுடனும் மூத்த தளபதிகள், பொறுப்பாளர்களின் வாழ்த்துரைகளுடனும், இணுவையூர் திருச்செந்திநாதன் தலமையிலான உருவாக்கக் குழுவால் தயாரிக்கப்பட்டிருக்கும் இப் பொத்தகம், எம் பண்பாட்டு விழுமியங்களை மட்டுமல்லாது எம் போராட்ட விழுமியங்களையும், வலுவையும் பேசுகிறது. விடுதலைப் புலிகளின் சமராய்வு பிரிவுப் பொறுப்பாளர் யோகி அவர்களின் சிறப்புக் கட்டுரையும் தமிழீழத்தை பற்றி பேசுகிறது.

இ.இ.கவிமகன்

 

 


Recommended For You

About the Author: Editor