முரளிதரனாக விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது: தீபச்செல்வன்!!

முரளிதரனாக விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என ஈழக் கவிஞர் தீபச்செல்வன், நடிகர் விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏன் விஜய் சேதுபதி இந்தப் பாத்திரத்தில் நடிக்கக் கூடாது என்பதற்காக குமுதம் இதழில் தீபச்செல்வன் கூறியிருக்கும் காரணங்கள் இதோ.

இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் செய்தி ஈழத் தமிழ் மக்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராகவும், ஈழத் தாய்மார்களின் கண்ணீரை கொச்சைப்படுத்தியும் முரளிதரன் பேசிய கருத்துக்கள், நெஞ்சில் சிங்கள இராணுவத்தின் குண்டுகளைப் போலவே தாக்கியுள்ளன.

முரளிதரன் இலங்கை கிரிக்கெட் வீரர் என்பதைவிட அவர், சிங்கள கிரிக்கெட் வீரர் என்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவருக்கு தமிழ் மாத்திரமே தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஈழத் தமிழர்களையும் அவருக்கு தெரியாது. அவர் பேசுவதுதான் சிங்களம் போல இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அவர் ஒரு சிங்களவராகவே சிந்திப்பதும் பேசுவதையும் புரிந்து கொண்டோம்.

முத்தையா முரளிதரன் பிறப்பால், தமிழர். ஆனால் அவர் தமிழர் என்பதற்காக ஈழத் தமிழர்கள் ஒருபோதும் பெருமை கொண்டது கிடையாது. முரளிதரன் போல சிங்களத் தலைநகர் கொழும்பில் மொழியாலும் உணர்வாலும் தம்மை சிங்களவராக்கிக் கொண்ட பல தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் சிங்கள அரசுக்கு ஆதரவாக செயற்படுவதுடன் ஈழத் தமிழ் மக்கள்மீதான இன ஒடுக்குமுறையையையும் சிங்களத் தரப்பில் நின்று நியாயப்படுத்துவார்கள்.

சிங்களப் பகுதியில் இரண்டு சிங்களக் கிராமங்களை தத்தெடுத்துள்ள முரளிதரன் போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு சிறு உதவியாவது செய்திருக்கிறாரா? உதவி செய்யாவிட்டால்கூட பரவாயில்லை. உபத்திரம் செய்யாமல் இருந்திருக்கிறாரா?

ஒருமுறை கானடா பிரதமர் டேவிட் காமரோன் இலங்கை வந்தார். வடக்கிற்கு சென்று ஈழத் தமிழர்களை சந்திப்பதைததான் அதிகம் விரும்பினார். அவர் வந்திருந்தபோது, போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், ஒரு போராட்டத்தை நடாத்தியிருந்தனர். நடுவீதியில் அந்த மக்கள் கண்ணீரோடு புரண்டழுதனர். சிங்கள அரசால் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்க கானடா நாடு உதவ வேண்டும் என்றும் அன்றைய அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழுது குளறினார்கள்.

ராஜபக்சேவின் ஆட்சியில் கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனா, அமைச்சராக செயற்பட்டார். ஆனால் முரளிதரன் ஒரு அமைச்சராக இருக்கவில்லை. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பேசி வந்தார். முப்பது தாய்மார்கள் ஒன்று கூடிப் போராட்டம் நடத்துவதனால், இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று ஆகிவிடாது என்றும், அவர்களை எவரும் தூண்டி இப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றார் முரளி.

தம் பிள்ளைகளை போரின் இறுதியில் சிங்கள அரசிடம் கையளித்துவிட்டு, தெருத்தெருவாக போராடுகின்ற மக்களைப் பார்த்து, இவர்களை எவரும் தூண்டியிருப்பார் என்று சொல்வது எத்தகைய கொடுமை? ஈழத்தின் வடக்கு கிழக்கு நிலமே சிங்கள அரசின் இனப்படுகொலைகளுக்காகவும் காணாமல் ஆக்ப்பட்ட கொடூரங்களுக்காகவும் போராடி வரும் நிலையில் முரளி இவ்வாறு சொல்வது எவ்வளவு அபத்தமானது?

2009 இனப்படுகொலைப் போருக்குப் பிறகு, இலங்கையில் சமத்துவமும் சமாதானமும் நிலவுகின்றது என்றும் 20 வருடமாக இலங்கை அணியில் இருந்த தமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் போரை வெற்றிகரமாக முடித்த மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி என்றும் முரளி கூறினார். கிட்டத்தட்ட சிங்களவராக மாறிவிட்ட, முரளிதரனுக்கு பிரச்சினை இல்லை என்பதால் ஈழத் தமிழர்கள்மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இன அழிப்பும் ஒடுக்குமுறையும் உரிமை மறுப்பும் இல்லை என்று ஆகுமா?

ராஜபக்சே போரை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்? ஒன்றரை லட்சம் மக்களை கொன்று, பல ஆயிரம் பேரை காணாமல் ஆக்கி, ஒரு தேசத்தை அழித்து ராஜபக்சே மேற்கொண்ட போர் பாராட்டுக்குரியதா?

இலங்கையில் இப்போது போர் இல்லை. அமைதிதான் நிலவுகின்றது. இதனை சர்வதேசம் குழப்ப வேண்டாம் என்று கூறினார் முரளி. போர் முடிந்த பிறகு கூட அமைதியின் பேரின் ஈழத் தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப் படுகின்றன. வழிபடும் ஆலயங்கள் அழிக்கப்பட்டு, புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவ சூழலில் துன்புறுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு ஒரு தீர்வும் அமைதியும் கிடைக்க கூடாது என்ற சிங்களத்தின் குரல்தான் முரளியின் வாயில் ஒலித்தது.

ஈழ இனப்படுகொலைப் போரை நடாத்திய, முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் இன்றைய ஆட்சியாளர்களும், அப் போரின் குற்றத்திலிருந்து தப்பிக்கொள்ள, புலிகளின் முன்னாள் தளபதியும் புலிகளை காட்டிக் கொடுத்தவருமான கருணா அம்மான் எனப்படும் முரளிதரனுடன் முத்தையா முரளிதரனையும் பயன்படுத்தினர். முத்தையா முரளிதரன் இன்னொரு கருணா ஆகிய சூழல் இதுதான்.

விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் நடிப்பது, துரோகி கருணாவின் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பானது. அது அவரது நடிப்புலக சாதனையையே பாழாக்கும் செயல். அவர் இதுவரை அடைந்த சாதனையை போட்டுடைக்கும் வேலை. ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி ஒரு இலங்கை அகதி கதாபாத்திரத்துடன் வைத்துக் கொண்டபோது, ஈழத் தமிழர்கள் அதனை நெகிழ்ச்சியுடன் பார்த்தார்கள்.

கனடாவை சேர்ந்த இயக்குனர் ரஞ்சித் ஜோசேப், தன்னுடைய பனை படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சித்தார். 2009 போருக்குப் பிறகு சிங்களப் பகுதிகளில் தாக்குதல் தயார் நிலையில் இருக்கும் ஒரு புலிப் போராளி அடுத்த கட்டமாக என்ன வழியை தேர்ந்தெடுக்கிறான் என்பதே பனை படத்தின் கதை. அப்படியொரு பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால், அது உலகத் தமிழர்களின் திரைப்படமாக இருக்கும்.

மனதால் முழுக்க முழுக்க சிங்களவராக இருக்கும், சிங்கள அரசுக்கு சாதகமாக இருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் அவர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் எதிராக செயற்படும், முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பது, நமது விரலை கொண்டே நமது கண்களை குத்தும் செயலாகும். அத்துடன், சிங்கள அரசுக்கும் முரளியின் கருத்துக்களுக்கும் அது அங்கீகாரத்தை அளிக்கும். ஈழத் தமிழ் இனத்தை இன்னும் காயப்படுத்தும். ஈழ அழிப்புக்கு துணையாகும்.


Recommended For You

About the Author: Editor