ஜனாதிபதி , மாகாண சபை தேர்தலை ஒரே தினத்தில் நடத்த கோரிக்கை.

ஜனாதிபதித் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பஃப்ரலின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தேர்தல் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இவ்வாறு இரு தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதன் மூலம் அரசாங்கம் 2 பில்லியன் ரூபாயினை சேமிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பலர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர். இதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தல் டிசம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என்றும் ஹெட்டியராச்சி குறிப்பிட்டார்.

எனவே தற்போதுள்ள சட்டத்தை விரைவாக திருத்துவதன் மூலம் வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகரை கேட்டுக்கொண்டுள்ளார்.

இரண்டு தேர்தல்கள் அடுத்தடுத்து நெருங்கிய காலத்திற்குள் நடத்தப்பட்டால், பொதுமக்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் இதனால் இது இரண்டாவது தேர்தலை நேரடியாக பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அனைத்து பொது பிரதிநிதிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பெரும்பான்மையான நேரத்தை ஒதுக்குவார்கள், எனவே ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்