அமெரிக்க உடன்பாட்டுக்கு அனுமதியளிக்க மைத்திரி தயக்கம்!!

அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றும் ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுக்காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த உடன்பாடு குறித்து ஆலோசித்து முடிவெடுக்க தனக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மிலேனியம் சவால் உடன்பாட்டுடன் தொடர்புடைய தரப்புகளுடன் நாளை – ஓகஸ்ட் முதலாம் நாள், கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், இதுகுறித்து விரிவாக ஆராய்ந்த பின்னர், அமைச்சரவைக்கு தனது முடிவை அறிவிப்பதாகவும் சிறிலங்கா அதிபர் கூறினார்.

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது. இது ஒரு அபிவிருத்தி உதவி உடன்பாடு என்றும், அமெரிக்காவினால் கொடையாகவே 480 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும் என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்த நிதிஉதவி முக்கியமானது என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor