13 பேருக்கு சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை!

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பிலான வழக்கில் தண்டனை பெற்ற மூன்று தமிழர்கள் உட்பட 13 பேரது கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவர்களுக்கான மரண தண்டனையை சிங்கப்பூர் அரசு எந்நேரமும் நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வமாக சிங்கப்பூர் அரசு இந்த தகவலை வெளியிடாதபோதும், மரண தண்டனை கைதிகளுக்கான சட்ட உதவிகளை மேற்கொண்டுவருகின்ற மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் இந்த செய்தியை கூறியுள்ளார்.

மலேசியாவை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம், பன்னீர்செல்வம் பரந்தாமன், கோபி ஆவுடையான், தட்சணாமூர்த்தி கந்தையா ஆகியோர் தொடர்பிலான விவரங்களை கையாண்டுவரும் வழக்கறிஞர் சுரேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 13 பேர் சிங்கப்பூர் அரசிடம் கருணை மனு விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களின் மனுக்கள் அண்மையில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் , இவர்கள்அனைவருக்குமான தண்டனை மிகவிரைவில் இரகசியாக நிறைவேற்றப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் மலேசியாவை சேர்ந்த மேற்படி நால்வரில் ஒருவரது கருணை மனு நிராகரிக்கப்படாதபோதும் மிகுதி அனைவரதும் மனுக்கள் அண்மையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரகசியமான முறையில் தூக்கிலிட்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முறையை பின்பற்றிவரும் சிங்கப்பூர் அரசு, கடந்த 2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய இளைஞன் NGUYEN TUONG VAN-க்கு இவ்வாறான தண்டனையை நிறைவேற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor