அவசரகால சட்டம் நீடிக்கப்படுமா ?

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

நாடாளுன்றம் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது.

இன்றைய அமர்விலேயே அவசரகால சட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அவசரகால சட்டம் தொடர்பான யோசனை இன்றைய தினம் சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, நேற்று முன்தினம் அமைச்சுப் பதவிகளை ஏற்ற முஸ்லிம் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகளும் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரணவுக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் ஒன்றை ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்