மஹிந்த தரப்பு மற்றும் ரணில் தரப்புக்கு ஆதரவில்லை – அனந்தி.

இன அழிப்பை மேற்கொண்ட மஹிந்த தரப்புக்கும் அதற்கு ஆதரவு வழங்கிய ரணில் தரப்புக்கும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஒருபோதும் ஆதரவு வழங்கத் தாங்கள் தயாராக இல்லை என்று வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 6 பேரையும், நேற்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா சிறைச்சாலையில் சென்று அவர் பார்வையிட்டார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எங்களுடைய கட்சியின் நிலைப்பாடாகும்.

சிங்கள குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வு போன்ற விடயங்களுக்கு தீர்வு வழங்கப்பட்டாலும்கூட நாம் மஹிந்த தரப்பையும் அதற்கு ஆதரவு வழங்கிய ரணில் தரப்பையும் ஏற்கமாட்டோம்.

வேறு புதிய, இன முரண்பாட்டை ஏற்படுத்தாத அரசியல் தலைமைத்துவம் அல்லது கட்சிகள் எமது நிபந்தனைகளுக்கு கொள்கை ரீதியில் உடன்பட்டால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக யோசிப்போம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்