இனத்தையையும் , மொழியையும் காக்க வேண்டும் – ஸ்ராலின்.

இனத்தை, மொழியைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மறைந்த தமிழறிஞர் மா.நன்னனின் அகமும் புறமும், இவர்தாம் பெரியார் நூல்கள் வெளியீட்டு விழா அடையாறு திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் அரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. நூல்களை மு.க.ஸ்டாலின் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

குறித்த விழாவில் மேலும் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாமல் தி.மு.க.வினர் வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பினர்.

மும்மொழி கொள்கை என்று ஹிந்தியை மத்திய அரசு திணிக்க முயற்சித்தபோது, 1965-ஆம் ஆண்டுகால போராட்டம் மீண்டும் வரும் எனக் கூறி, அந்தக் கொள்கையைத் திரும்பப் பெற வைத்துள்ளோம்.

தென்னக ரயில்வே ஹிந்தியிலே கடிதப் போக்குவரத்து இருக்க வேண்டும் என்று கூறியபோது, அதையும் போராடித் திரும்பப் பெற வைத்துள்ளோம். அஞ்சல் துறை தேர்வு ஹிந்தியில் நடத்தப்பட்டதை, ரத்து செய்ய வைத்துள்ளோம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளோம்.

புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து திமுக சார்பில் குழு அமைத்து, அறிக்கை தயாரித்தோம். அந்த அறிக்கையைத் தொடர்புடைய மத்திய அமைச்சரிடம் கொடுத்துள்ளோம். புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிராக உள்ளது என்று கூறினோம்.

அந்த அமைச்சரும் உங்கள் உணர்வுகளை மதிக்கிறோம் என்று சொல்லக்கூடிய வகையில் பணியாற்றி வருகிறோம். இனத்தை, மொழியைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்