ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களிடம் அமெரிக்கா விசாரணை.

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை, அமெரிக்க அதிகாரிகள் சந்தித்துள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தகவல் வெளியிட்டுள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “அடிப்படைவாதிகளின் தாக்குதல்களின் பின்னர், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது, ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை. பிரதமர் கொழும்பில் இருக்கவில்லை. தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்தும் எந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் அமெரிக்க பிரதிநிதிகள் சிலர் சந்தித்துள்ளனர்.

அமெரிக்க புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவரும் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரும் தூதரகத்தில் பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கடற்படையினர் இந்த சந்திப்பிற்கு அனுமதி வழங்க மறுத்தபோதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள்கூட அந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

சுமார் 2 மணித்தியாலயங்கள் இந்த சந்திப்பு நீடித்திருந்தபோதிலும் இதுவரையில் அது தொடர்பான தகவல்கள் யாருக்கும் தெரியாது.

இதனை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது அனைத்து விடயங்களிலும் அமெரிக்காவுக்கு ஏற்றாற்போல இலங்கை முழுமையாக மாறியிருப்பது தெளிவாகிறது.

அண்மையில் அமெரிக்காவிலிருந்து பெயர்கூட குறிப்பிடப்படாத விமானமொன்று இலங்கை வந்தது. இது தொடர்பாகவும் யாரும் கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறு பொறுப்பற்று செயற்படுவதன் மூலம் பயங்கரவாதம் மிக இலகுவாக இலங்கையில் ஊடுருவதற்கு அரசாங்கம்தான் வழியமைத்துக்கொடுத்துள்ளது” என்றும் அவர் சாடியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்