குடியிருப்பு பகுதியில் வீழ்ந்த ராணுவ விமானம்!!

பாகிஸ்தான் – ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதியொன்றில் சிறிய ரக ராணுவ விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த விமானத்தில் பயணித்த ஐந்து பேரும், பொதுமக்கள் 12 பேரும் உயிரிழந்ததாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாகவும், விமானம் கீழே விழுந்ததும் தீப்பற்றி எரிந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகில் இருக்கும் ராவல்பிண்டி நகரில் ராணுவத் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை என்னவென்று தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

விபத்து இடம்பெற்ற பகுதியில் பொது மக்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் சிலர் அழுது கொண்டிருக்கின்றனர் என ஏ.எஃப்.பி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் எடுக்கப்பட்ட ஔிப்படங்களில் சில வீடுகளில் கரும்புகை படிந்துள்ளதையும், சில வீடுகள் இடிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

ஏ.எஃப்.பியின் செய்தியாளர் ஒருவர் ‘அந்த பகுதியில் உள்ள இடிபாடுகளில் இருந்து புகை இன்னும் வௌிவந்துக் கொண்டிருப்பதாகவும், வீட்டின் கூரை ஒன்றின் மீது விமானத்தின் பகுதியொன்று இருப்பதாகவும்’ தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு தனியார் விமான சேவை நிறுவனமான எயா ப்ளூவின் விமானம் ஒன்று இஸ்லாமாபாத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 150 பேர் உயிரிழந்தனர். அதுவே பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற மோசமான விமான விபத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor