‘நைஜீரியா இஸ்லாமிய இயக்கத்துக்கு’ ஜனாதிபதியால் தடை!!

நைஜீரியாவில் அதிகரித்து வரும் வகுப்புவாத மோதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின் எதிரொலியாக இஸ்லாமிய இயக்கத்துக்கு தடை விதித்து ஜனாதிபதி முகமது புகாரி உத்தரவிட்டுள்ளார்.

வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அவர் நேற்று (திங்கட்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்தார். நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒருபுறம் தீராப்பகையும் மோதல்களும் அதிகரித்து வருகின்றன.

இதுதவிர, முஸ்லிம் மக்களுக்குள்ளும் ஷியா- சுன்னி பிரிவினருக்கிடையே உட்பூசல்களும் மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.

கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு பேரணியின் போது கைது செய்யப்பட்ட ஷியா தலைவர் இப்ராஹிம் ஜக்ஜக்கி என்பவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய கோரி அந்த நாட்டின் பல பகுதிகளில் ஷியா பிரிவினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறையில் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கும் நைஜீரிய இஸ்லாமிய இயக்கம் என்ற அமைப்பின் தலைவரான இப்ராஹிம் ஜக்ஜக்கியை மருத்துவ காரணங்களுக்காக பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கடுனா மாநில நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவரது விடுதலையை முன்வைத்து அபுஜா நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது.

இந்த நிலையில், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த நைஜீரியா இஸ்லாமிய இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, ஜனாதிபதி முகமது புகாரி நேற்று தடையுத்தரவை பிறப்பித்தார்.

’நைஜீரிய இஸ்லாமிய இயக்கத்தை தற்போது வழிநடத்துபவர்கள் வன்முறை பாதையில் அதிகமான நாட்டம் கொண்டவர்களாக இருப்பதால் நாட்டில் அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட இந்த தடையை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்த தடை ஷியா பிரிவு முஸ்லிம் மக்கள் மீதான தடையல்ல. நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor