நியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக திலான் சமரவீர நியமனம்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான திலான் சமரவீர, நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி, இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இதற்கமைய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் நியூஸிலாந்து அணி, விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் முதலாவதாக நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.

இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சதகமான ஆடுகளங்கள் என்பதால் அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இச் சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு கட்டமாக நடைபெறவுள்ளது.

இதனால், இத்தொடர் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகின்றது. ஆகையால் இலங்கை ஆடுகளங்களில் ஆதிக்கம் செலுத்திய திலான் சமரவீரவை நியூஸிலாந்து கிரிக்கெட் சபை, துடுப்பாட்ட ஆலோசகராக நியமித்துள்ளது.

2013ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்ற திலான் சமரவீர, பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்கு களத்தடுப்பு பயிற்சியாளராகவும் அவர் இருந்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கையின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இருந்த திலான் சமரவீரவின் பதவிக்காலம் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடருடன் முடிவடைந்துள்ள நிலையில், அவரை தற்போது நியூஸிலாந்து கிரிக்கெட் சபை, துடுப்பாட்ட ஆலோசகராக நியமித்துள்ளது.

கிரிக்கெட் சபையின் இந்த தீர்மானத்தை நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கெர்ரி ஸ்டீட் வரவேற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கு புகழ்பெற்ற 42 வயதான திலான் சமரவீர, இலங்கை அணிக்காக 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5462 ஓட்டங்களை குவித்துள்ளார்.

231 ஓட்டங்கள் அதிகபட்ச ஓட்டமாகும். சராசரி 48.76 ஆகும். மேலும் 14 சதங்களும், 30 அரை சதங்களும் அவர்அடித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, ஒகஸ்ட் 14ஆம் திகதி கொழும்பு- ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது


Recommended For You

About the Author: Editor