குடிமகன்களால் 15 கோடி வருமானம்

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான வேலைத்திட்டத்திற்கு அமைய, கடந்த 25 நாட்களில் 6,315 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து குறைந்தபட்சம் சுமார் ரூபா 15 கோடி அபராதம் அறவிடப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2019/10 எனும் திருத்தப்பட்ட  மோட்டார் வாகன சட்டத்தின் 216 ஆவது பிரிவின் கீழ், சாதாரண சாரதி ஒருவர் போதையில் வாகனம் செலுத்தினால், ரூபா 25,000 – 30,000 அபராதம் அல்லது 03 மாதத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரு தண்டனைகளுக்கும் உள்ளாக வேண்டி நேரிடும்.
அது தவிர, 12 மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தும் வகையிலான தண்டனை விதிக்கப்படும் என, ருவன் குணசேகர  தெரிவித்தார்.
மேலும், இச்சட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து வாகனத்தை செலுத்தும் சாரதி ஒருவர் போதையில் வாகனம் செலுத்தினால், ரூபா 25,000 – 30,000 அபராதம் அல்லது 06 மாதத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இரு தண்டனைகளுக்கும் உள்ளாக வேண்டி நேரிடும்.
அது தவிர, அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்
இச்சட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து சாரதி ஒருவர், போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தினால், ரூபா 100,000 முதல் 150,000 இலட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அல்லாவிடின் 2 முதல் 10 வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அது தவிர, அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, போதையில் வாகனம் செலுத்திய 6,315 சாரதிகளை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளமைக்கு அமைய, 6,315 விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் இது வரை கைது செய்யப்பட்ட 6,315 சாரதிகளிடமிருந்து அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் அவர்களிடமிருந்து குறைந்தபட்ச அபராத தொகையான தலா ரூபா 25,000 விதிக்கப்படும் எனவும், இதன் மூலம் ரூபா 15 கோடிக்கும் அதிகமான அபராதம் ஈட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: ஈழவன்