நீதிக்காக போராடுகிறோம் – 38 பேரை தற்போது இழந்துவிட்டோம்.

கடத்தபட்டு காணாமல் ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில் தீர்வை வழங்க வேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

‘சர்வதேசமே எமக்கு நீதி விசாரணை வேண்டும் நிலையான தீர்வு வேண்டும்’, ‘கையிலே ஒப்படைத்தவரை திரும்பி தருவதற்கு எதற்கு ஓம்.எம்.பி?’ என்ற பலமான கோரிக்கையின் அடிப்படையில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ” பல வருடங்கள் கடந்தும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு வராத நிலையில் நீதிக்கான போராட்டத்தில் தொடர்ந்தும் நாம் ஈடுபட்டுள்ளோம்.

முல்லைத்தீவில் மரணடைந்த திரேசம்மா என்ற எமது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருடன் இதுவரை 38 பேர் இந்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மரணித்துள்ளனர்.

38 பேர் இறந்த நிலையில் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலர் உடல் தளர்வுற்ற நிலையில் காணப்படுகின்றனர். இந்த நிலையில் தான் நாம் நீதியை கோரி நிற்கின்றோம்.

வவுனியாவில் மொத்தமாக 420 பேர் காணாமல் ஆக்கபட்டுள்ளனர். எனவே அவர்கள் காணாமல் ஆக்கபட்ட காலங்களில் பணியாற்றிய தளபதிகளிடம் விசாரணை நடாத்தினால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

கடத்தபட்டு காணாமல் ஆக்கபட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீதிக்காக நாம் ஏங்கிக்கொண்டிருக்கும் அவல நிலையில், தீர்வை வழங்க வேண்டியவர்கள் அசமந்தமாகவே இருக்கிறார்கள். எனவே இந்த விடயங்களை ஊடகங்கள் வாயிலாக சர்வதேச சமூகத்திற்கு கூற முனைகின்றோம்” என்று தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்