ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யார் ?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் என கருதப்படுவோர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் ஏற்கனவே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் நான்காவதாக ஐ.தே.க.வின் வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் இணைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் தகவல் அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர், “கட்சிக்குள் நான்கு தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர். எமது வேட்பாளர் யார் என்ற இறுதி முடிவு பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்.

பொதுஜன பெரமுன இன்னமும் தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. எனவே ஐ.தே.க.வும் வேட்பாளரை அறிவிக்க அவசரப்படாது.

பொதுஜன பெரமுனவினர் வேட்பாளரை அறிவித்ததும் நாமும் எமது வேட்பாளரை அறிவிப்போம்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக அறிவித்தால் நாமும் பொருத்தமானவரை அறிவிப்போம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் ஐ.தே.க.வுடன் இணைந்துகொள்ளவுள்ளனர். அவர்களில் ஒருவர் அனுராதபுர மாவட்டத்தில் பலம் வாய்ந்தவர்” என்றும் அவர் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்