நுண்நிதி கடனால் விவாகரத்து அதிகரித்துள்ளது.

யாழ்.கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் தொல்லையினால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ளதுடன், பெற்றோா் தலைமறைவான நிலையில் பிள்ளைகள் அனாதரவாக விடப்பட்டுள்ளனா். என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலா் எஸ்.தவரூபன் சுட்டிக்காட்டியுள்ளாா்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்கும் போதே இதனை தெரிவித்தார்.

அங்கு தெரிவித்ததாவது,கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் நுண்நிதி கடன் நிறுவனங்களினால் ஏராளமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எமது பிரதேச செயலக அண்மைய தகவலின் படி இந்த கடன் நிறுவனங்களினால் 14 குடும்பங்கள் விவாகரத்து வரை சென்றுள்ளனர்.

அவ்வாறு சென்றுள்ள அனைத்து குடும்பமும் 32 வயதுக்கு உட்படட இளம் குடும்பங்களாகவே காணப்படுகின்றது.மேலும் நுண்நிதி கடன் நிறுவனங்களில் கடன்களை பெற்ற பெற்றோர்கள் கடன் வசூலிப்பளர்களுக்கு பயந்து வீடுகளை விட்டு தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் அந்த குடும்பங்களின் பிள்ளைகள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் சமூகத்தில் பாரிய சவால்களையும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.

கடன் நிறுவனங்களினால் இவ்வாறான பாதிப்புக்களுக்கு அப்பால் கடன் பெற்ற பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்து காணப்படுகின்றன.

ஒரு சில சம்பவங்கள் மட்டும் வெளியில் வந்தாலும் பல சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரியாது நடைபெறுகின்றது. இதனால் எமது பெண்கள் உள,உடல் ரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே நுண்நிதி கடன் நிறுவனங்களில் கடன் பெறுவதை கட்டுப்படுத்த பாதிப்புக்களை எதிர் கொள்ளாமல் இருக்க சடட ஏற்பாடுகளை அல்லது கொள்கைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமனற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,

நுண்நிதி நிறுவனங்களில் ஒருவரே பல கடன்களை பெறுகின்றனர்.மேலும் ஒரு குடும்பத்தில் பல அங்கத்தவர்கள் கடன்களை எடுக்கின்றனர். அப்படியானால் அவர்களினால் எவ்வாறு இந்த கடன்களை கட்டிட முடியும். இதனால் தான் சமூகத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. இது தொடர்பில் நாம் அரசுக்கு பல முறை கூறியதன் பயனாக 46 ஆயிரத்து 500 பேரின் நுண்நிதி கடன்களை அரசு செலுத்தியது.எனினும் இந்த பிரச்சனை முடிந்தபாடில்லை.அப்படியாயின் நாம் இந்த நிறுவனங்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என நிதி அமைச்சுடன் கலந்துரையாடி ஓர் முடிவெடுக்கலாம் என்றார்


Recommended For You

About the Author: ஈழவன்