தீப்பற்றி எரிந்தது இராணுவ வாகனம்!!

மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் இராணுவத்தினரின் ஜீப் வண்டி ஒன்றும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள ஆற்றுக்கு அருகில் குறித்த மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததுடன், அதன் அருகில் இராணுவத்தினரின் புனர்வாழ்வு பிரிவின் ஜீப்வண்டியும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திடீரென பகல் 1 மணியளவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்தபோதும் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்துள்ளதுடன், இராணுவத்தினரின் ஜீப்வண்டியும் சிறியளவில் தீக்கிரையாகியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் குற்ற தடயவியல் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor