கதிர்காமர் கொலை வழக்கு – ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளவரால் இலங்கையில் குழப்பம்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள் குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2005ஆம் ஆண்டு கொழும்பில் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்தப் படுகொலை தொடர்பாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், புலனாய்வுத் துறையை சேர்ந்த சாள்ஸ் மாஸ்டர், மணிமேகலை ஆகியோருடன், முத்தையா சகாதேவன், இசிதர் ஆரோக்கியநாதன் ஆகியோருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இருந்து இசிதர் ஆரோக்கியநாதன் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், சகாதேவன் கடந்த மாதம் சிறையில் இருந்த போது உயிரிழந்துவிட்டார்.

ஏனைய நான்கு சந்தேகநபர்களும் இறந்து விட்டதால், இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாக மேல் நீதிமன்றம் கூறியிருந்தது.

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் இல்லாத ஒருவரே, கடந்த ஜனவரி மாதம், ஜேர்மனி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

40 வயதுடைய, நவநீதன் என அழைக்கப்படுபவருக்கு எதிராக ஜேர்மனி சட்ட அதிகாரிகளால் ஸ்ரூட்கார்ட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனினும், ஜேர்மனியின் தனியுரிமை சட்டங்களின் அடிப்படையில் இவரது முழுப்பெயர், வெளியிடப்படவில்லை. இதனால் இலங்கை புலனாய்வு அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

ஏனென்றால் இலங்கை புலனாய்வுப் பிரிவுகளிடம் உள்ள பட்டியலில் நவநீதன் என்ற ஒரே ஒரு நபர் மாத்திரமே உள்ளார். ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளவர் அவரா, என்பதை இலங்கைப் புலனாய்வாளர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஜேர்மனியில் கைது செய்யப்பட்டவர் கதிர்காமர் கொலைக்கு உதவியாக இருந்தவர் என்றும், தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 2000இல் இருந்து 2009 வரை உறுப்பினராக இருந்தார் என்றும், இறுதிப்போரின் போது, இலங்கையைவிட்டு புலிகளின் முக்கிய தலைவர்கள் வெளியேறிச் செல்ல உதவினார் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

சந்தேக நபர் 2012ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு வந்திருப்பதாக அங்குள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு எதிரான இந்த வழக்கை, உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர், இந்த வழக்கிற்குத் தேவையான சான்றுகள் மற்றும் ஏனைய ஆதாரங்களை இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக வழங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்