1000 விகாரைகளை அமைக்க உதவ 2 கோடி இலஞ்சம் வாங்கியது கூட்டமைப்பு – டக்ளஸ்

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் வடகிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என முன்மொழியப்பட்டிருந்தபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது 2 கோடி ரூபா இலஞ்சம் வாங்கி அதற்கு ஆதரவு வழங்கியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இன்று வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் தனியார் காணியில் பௌத்த விகாரை அமைக்கப்படுகின்றது. இதையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கண்டுகொள்ளாது மௌனம் சாதித்து வருகின்றது.

கடந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கூட்டமைப்பினர் எவ்வாறு விகாரை விடயத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அதனாலேயே இவ்வாறு வடக்கில் ஆங்காங்கே இருந்த நிலை மாறி இன்று பரவலாக பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இவ்வாறு முளைத்துவரும் விகாரைகள் தொடர்பில் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதிலும் அதை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

காரணம் ஆராயப்படுகின்ற போது வரவு செலவு திட்த்தில் விகாரை கட்ட ஆதரவு தெரிவித்தவர்கள் எவ்வாறு அதை தடுப்பது என்கின்ற தடுமாற்றத்தில் உள்ளதை அவதானிக்க மடிகின்றது. எனினும் இதற்கு முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பு கூற வேண்டும்.

ஊடகங்கள் உண்மைத்தன்மையுடன் உள்ளதை உள்ளபடி வெளிக்கொண்டு வருவதுடன் மக்களுக்கு சரியான வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும். அதேபோன்று உள்ளதை உள்ளபடி என்கின்ற போது குறிப்பாக கண்ணாடி போன்று செயற்பட வேண்டும். அதாவது சம்பவங்களையோ அல்லது செயற்பாடுகளை உள்ளபடி எடுத்துக் கூறாது இருட்டடிப்பு அவதூறுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் அச்சு ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் ஆயுத அழுத்தங்களுக்கு உள்பட்டு எமது கட்சி மீது பல்வேறு அவதூறான செய்திகளை வெளியிட்டிருந்தன. அதற்கான மறுப்பறிக்கைகள் எம்மால் வெளியிடப்பட்ட போதும் அவை வெளிக்கொண்டுவராது மறைக்கப்பட்டிருந்தன.

அதன் காரணமாகவே மக்கள் பல உண்மை நிலமைகளை அறிந்துகொள் முடியாதிருந்தது. இது எமக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கும் அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை உருவாக்கியிருந்தது. இன்றும் இந்த இருட்டடிப்புக்கள் தொடர்வதாகவே தெரிகின்றது.

இந்த நிலமை மாறி ஊடகங்கள் உண்மைகளை உள்ளதை உள்ளவாறு மக்களிடம் எடுத்துச் சொன்னால் நிச்சயமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கு கணிசமான தீர்வு பெற்றுக் கொடுக்க என்னால் முடியும். அதற்கு ஊடகங்கள் உண்மை நிலயையும் கள நிலயையும் உணர்ந்து செயற்பட வேண்டும் – என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்