பங்களாதேஷ்க்கு எதிரான தொடர்பில் கிண்ணத்தை வென்றது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

அந்தவகையில், இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த வகையில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கையின் பந்து வீச்சாளர்கள் ஆரம்பம் முதலே கடும் நெருக்கடியை கொடுத்தார்கள்.

இதனிடையே, நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ரஹீமின் உதவியுடன் பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக, ரஹீம் 98 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன், மெஹிடி ஹசன் 43 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் சோபிக்கவில்லை.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக, நுவான் பிரதீப், இசுரு உதான மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் 239 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை சுவீகரித்தது. அந்தவகையில் 7 விக்கெட்டுகளால் இலங்கை வெற்றிபெற்றது.

அணி சார்பாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அவிஸ்க பெர்னாண்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன், அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களையும், குசல் பெரேரா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், முஸ்ராபிஷர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, மெஹிடி ஹசன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றியுள்ள இலங்கை அணி, வரும் 31ஆம் திகதி பங்களாதேஷ் உடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்