நான் அவனில்லை சினிமா பாணியில் பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்தவர் கைது.

சினிமா பாணியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஆசாமி குறித்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நான் அவன் இல்லை என்ற சினிமா படத்தில் காநாயகன், பெண்களிடம் நான் அவன் இல்லை என்று கூறி காதலித்து ஏமாற்றி திருமணம் செய்வார். இதே போன்ற சம்பவம்தான் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியை சேர்ந்த கோட்டை ராஜூ என்பவருடைய மகள் கோமளாதேவி. பி.காம். பட்டதாரி. அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். கோமளாதேவிக்கும், ராமநாதபுரம் மாடக்கொட்டான் பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஹரிதரன் என்ற மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.

திருமணத்துக்கு பின்னர் துபாய்க்கு வேலைக்கு சென்ற கங்காதரன், சார்ஜாவில் அல்தரன் என்ற பெயரில் தனியார் பணிகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார். பின்னர் தனது மனைவியையும் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் வேறு சில பெண்களுடன் ரகசியமாக கங்காதரன் பேசி வந்ததை தொடர்ந்து அவரது நடவடிக்கையில் கோமளாதேவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்ததும் கோமளாதேவியை ஊருக்கு அழைத்து வந்துவிட்டார்.

பின்னர் மீண்டும் துபாய்க்கு சென்ற கங்காதரன் அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி, குழந்தைகளை பார்த்துச் சென்றுள்ளார். ஒருமுறை ஊருக்கு வந்த கங்காதரன் செல்போனுக்கு நள்ளிரவு 12 மணிக்கு மிஸ்டுகால் வந்துள்ளது. அந்த போன் எண்ணை குறித்துக்கொண்ட கோமளாதேவி அதில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர் முனையில் மற்றொரு பெண் பேசி இருக்கிறார். அந்த பெண் யாரென்று விசாரித்த போது, அவர் கங்காதரனின் மனைவி என்று கூறியதுடன், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவிக்க கோமளாதேவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இதே போல் மேலும் 2 பெண்களை கங்காதரன் திருமணம் செய்துகொண்டு குடித்தனம் நடத்தி வந்ததும் தெரியவந்ததால், தன்னுடைய கணவர் மீது தற்போது அவர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பான விசாரணையின் போது, கங்காதரன் குறித்து கோமளாதேவி போலீசாரிடம் பரபரப்பான தகவல்களை கூறி இருக்கிறார்.

‘நான் அவன் இல்லை’ சினிமா பாணியில் பெண்களுடன் பழகியதும், பின்னர் 4 பேரை திருமணம் செய்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் குடித்தனம் நடத்தி குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார் எனவும் கூறி, அதுகுறித்த கங்காதரனின் புகைப்படங்களையும் கொடுத்துள்ளார்.

கங்காதரனுக்கும், கோமளாதேவிக்கும் திருமணம் நடந்த பின்பு, சின்ன சேலம் பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்துள்ளார். சென்னையை சேர்ந்த யமுனா என்ற பெண்ணை 3வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஒருநாள் கோமளாதேவியிடம் வந்து, தான் திருந்தி விட்டதாகவும் இப்போது மிகுந்த கடனில் சிக்கியிருப்பதால் உன்னுடைய பெயரில் இருக்கும் சொத்தினை தனக்கு எழுதி தருமாறும் கேட்டுள்ளார். இதை நம்பிய கோமளாதேவியோ திருச்செந்தூர் கோவிலுக்கு அழைத்துச்சென்று கடலில் இறங்கி சத்தியம் வாங்கியுள்ளார். அதன் பின்பு சில சொத்துக்களை கோமளாதேவி எழுதிக்கொடுத்ததாகவும் தெரியவருகிறது.

அந்த சொத்துக்களை தன் வசப்படுத்திய கங்காதரன், வெளியூர் செல்வதாக கூறிவிட்டு டிமிக்கி கொடுத்துள்ளார். நேராக சென்னையை சென்ற அவர் தீபா என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து, அவருக்கும் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி கங்காதரன் தனது ரேஷன்கார்டில் கவிதா மற்றும் அவரது குழந்தையான ஸ்ரீதரன் ஆகியோர் பெயர்களை சேர்த்துள்ளார். 4வது திருமணம் செய்த தீபா என்ற பெண்ணின் பாஸ்போர்ட்டில், வீட்டு முகவரியாக ராமநாதபுரம் மாடக்கோட்டான் முகவரியை கொடுத்ததும் தெரியவந்து இருக்கிறது.

ஒவ்வொரு பெண்ணையும் அவர்களது குடும்ப வழக்கப்படி உறவினர்கள் முன்னிலையிலேயே கங்காதரன் திருமணம் செய்துள்ளதாகவும், குறிப்பிட்ட காலம் வாழ்ந்துவிட்டு குழந்தை பிறந்தவுடன் ஆண் குழந்தை எனில் அதற்கு தன்னுடைய அடையாளமாக ‘தரன்’ என முடியும் வகையில் பெயரை சூட்டிவிட்டு, அடுத்த திருமணத்திற்கு தயாராகிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அதன்படி முதல் மனைவியான கோமளாதேவியின் மகனுக்கு ஹரிதரன் எனவும், 2வது மனைவியான கவிதாவின் மகனுக்கு ஸ்ரீதரன் எனவும், 3வது மனைவியான யமுனாவின் மகனுக்கு கிரிதரன் என்றும் பெயர் சூட்டினாராம். 4வது மனைவியான தீபாவுக்கு பெண் குழந்தை உள்ளதாம்.

பகட்டான தோற்றத்தில் வலம் வந்த கங்காதரனை பற்றி முழுமையாக விசாரிக்காமல் அவசரகதியில் பெண் கொடுத்ததால், அவர் விரித்த வலையில் 4 அப்பாவி பெண்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது போலீசார் விசாரணையின் மூலம் உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் அவரிடம் வேறு பெண் யாராவது ஏமாந்து உள்ளாரா? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.


Recommended For You

About the Author: ஈழவன்