சாவகச்சேரி வைத்திய சாலையில் சங்கிலியால் பதட்டம்

சாவகச்சேரி வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் சிகிச்சை பெறும் பெண் நோயாளர் ஒருவரின் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபா தங்க நகை காணாமல் போயிருந்த நிலையில் பெரும் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் விடுதியில் வெளி வளாகத்திலிருந்து மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (ஜூலை 26) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்றுவரும் பெண் ஒருவர் தனது தங்க நகையைக் கழற்றி பணப்பையில் வைத்திருந்துள்ளார். அவரது பணப்பை கீழே வீழ்ந்து கிடந்துள்ளது.

அதனை எடுத்த பொதுமகன் ஒருவர் வைத்தியசாலை சிற்றூழியரிடம் கையளித்துள்ளார். அதனை வாங்கிய பெண் சிற்றூழியர், உரியவரிடம் கையளிக்காது வைத்திருந்துள்ளார்.
தனது பணப்பையைக் காணவில்லை என்று பெண் நோயாளர், விடுதியின் தாதிய உத்தியோகத்தரிடம் முறையிட்டுள்ளார். பின்னர் அவரது பணப்பை சிற்றூழியரால் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்தப் பணப்பையிலிருந்த சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையைக் காணவில்லை என்று பெண் நோயாளர் விடுதி தாதிய உத்தியோகத்தர்களிடம் முறையிட்டுள்ளார்.

விடுதியில் அவரது தங்க நகை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் பெண் நோயாளர் தனது உறவினர்களுக்கு விடயத்தைத் தெரியப்படுத்தியால் அவர்கள் அங்கு வந்து சகலரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அத்துடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பெண் நோயாளரின் உறவினர்கள் இணைந்து விடுதி முழுவதும் தேடியும் தங்க நகை கிடைக்கவில்லை. அதனால் பணப்பையை வைத்திருந்த சிற்றூழியரை விசாரணைக்கு உள்படுத்துமாறு பெண் நோயாளரின் உறவினர்கள் கோரினர்.

இந்த நிலையில் காணாமல் போன தங்க நகை நோயாளர் விடுதியின் வெளி வளாகத்திலிருந்து மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதனை அங்கு வீசியவர் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.


Recommended For You

About the Author: ஈழவன்