
மானிப்பாய் ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொல்பின் வான் மற்றும் பாரவூர்தி என்பன மின்னல் தாக்கி தீப் பற்றி எரிந்து நாசமாகின.
டொல்பின் வான் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பாரவூர்தி முன்பக்கம் எரிந்து சேதமடைந்தது.
இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது.
ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் வசிக்கும் சுதன் என்பவருடை வீட்டிலேயே இந்த இடர் இடம்பெற்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று இரவு மின்னல், இடியுடன் மழை பெய்தது. இதன்போதே இந்த இடர் இடம்பெற்றுள்ளது.
“நள்ளிரவு 12.30 மணியளவில் அயலவர்கள் கூடி என்னை அழைத்தனர். வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொல்பின் வான் மற்றும் பாரவூர்தி என்பன தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன.
மின்னல் தாக்கத்தால் டொல்பின் வான் மற்றும் பாரவூர்தியில் தீப்பற்றியிருக்கின்றது.
ஊரவர்கள் திரண்டு சுமார் 30 நிமிடங்கள் போராட்டத்தின் பின் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் எனது நண்பருடய டொல்பின் வான் முற்றாக எரிந்து நாசமாகிவிட்டது. பாரவூர்தியின் முன்பக்கம் தீயால் எரிந்துவிட்டது” என்று வீட்டின் உரிமையாளர் சுதன் தெரிவித்தார்.
“டயர் கடை வைத்துள்ளேன். எனினும் எனது வாழ்வாதரத்தின் முக்கிய பங்கை பாரவூர்தியே ஈடுசெய்கின்றது. டொல்பின் வான் எனது நண்பருடையது. அவர் எனது வீட்டில் நிறுத்திவைத்திருந்தார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.