மகளின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வந்த நளினி

மகளின் திருமணத் தேவைகளுக்காக நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் வேலூர் பெண்கள் சிறையிலிருந்து நளினி இன்றைய தினம்(25) பரோலில் வெளியே வந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேர் கடந்த- 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தனது மகளின் திருமண தேவைகளுக்காக ஆறு மாத காலம் பரோல் வழங்க வேண்டுமென நளினி அனுமதி கோரியிருந்தார்.

நளினியின் பரோல் வழக்கில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நளினி வேலூர் பெண்கள் சிறையிலிருந்து இன்று வெளியே வந்தார்.

இதேவேளை, அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது, ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் வெளியே வந்துள்ள நளினி வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியிலுள்ள சிங்கராயர் என்பவரின் வீட்டில் தங்கவுள்ளார். சிங்கராயர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளராகவுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு எதிர்வரும் ஆகஸ்ட்-05 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நளினிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்