கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் இணக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் நேற்று (புதன்கிழமை) இணக்கம் வெளியிட்டுள்ளது.

 

பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துநர் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிப்பதற்கான உயர்மட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதிவழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஒரு மாத காலமாக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்தன. எனினும் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியது.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது. எனினும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துநர் ஆகியோருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான வழக்குகளிலிருந்து அவர்களை முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக மாணவர் ஒன்றியத்தினர் நேற்று அறிவித்தனர்.

இதன்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மாணவர்கள் புறக்கணிப்பை முன்னெடுத்தனர். அதனையடுத்து மாணவர் ஒன்றிய உறுப்பினர்களை அழைத்து பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Webadmin