3வயது தம்பியுடன் பரீட்சை எழுதிய மாணவி – கண்களை கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்.

தென்னிலங்கையில் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

காலி பாடசாலை ஒன்றில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இரண்டாம் தவனை பரீட்சைகள் ஆரம்பமானது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது 3 வயது சகோதரனை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

குறித்த மாணவியின் மற்றுமொரு சகோதரன் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் தாய் அவரை பார்த்து கொள்கின்றார்.

அவரது தந்தை தேயிலை தொழிற்சாலையில் மாத சம்பளத்திற்கு வேலை செய்வதால் அவரால் விடுமுறை பெற முடியாது போயுள்ளது. இந்நிலையில் தனது தம்பியை வீட்டில் தனியாக விட்டு செல்ல முடியாமையினால் குறித்த மாணவி பரீட்சைக்கு செல்ல மறுத்துள்ளார்.

உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட ஆசிரியர் முச்சக்கர வண்டி ஒன்றை மாணவியின் வீட்டிற்கு அனுப்பி வைத்து மாணவியை பரீட்சைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதன் போதே குறித்த மாணவி தனது தம்பியை பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து சென்று தனது மேசைக்கு முன்னால் அமரவைத்துக்கொண்டு பரீட்சையை எழுதியுள்ளார்.

மிகவும் கெட்டிக்காரியான மாணவி வீட்டில் இருக்க கூடாது எனவும், குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதாகவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார். இந்த காரணங்களின் அடிப்படையில் குறித்த மாணவியை தம்பியுடன் பரீட்சை மண்டபத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கியதாக அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாணவியின் எதிர்கால கல்வி மீது அதிபர் கொண்டுள்ள அக்கறையும், மாணவி தனது சகோதரன் மீது கொண்டுள்ள பாசத்தையும் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்