சஹ்ரானின் பேஸ்புக் பக்கத்தை முடக்க முடியவில்லை – ரி.ஐ.டி தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் பேஸ்புக் பக்கத்தை முடக்கும்படி பயங்கரவாத தடுப்பு பிரிவு பலமுறை பேஸ்புக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தபோதும், பேஸ்புக் நிறுவனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் தரங்க பத்திரன நேற்று (24) நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளித்தார்.

“சஹ்ரான் ஹாசிம் மீண்டும் 2017இல் பேஸ்புக்கிற்கு திரும்பி வந்தபோது, அவரது பக்கத்தை முடக்கும்படி பேஸ்புக் நிறுவனத்தை நாடினோம். பலமுறை கோரிக்கை விடுத்தும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு சிலநாள் முன்னர் வரை பேஸ்புக் நடவடிக்கை எடுக்கவில்லை.

சஹ்ரானின் பேஸ்புக் பக்கத்தை முடக்க இலங்கை CERTஇன் ஆதரவை நாடினோம். சஹ்ரான் பிடியாணையை மின்னஞ்சல் செய்வதற்கு முன்னர் பேஸ்புக்கை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை.

சஹ்ரான் தலைமறைவாக இருந்தாலும் பேஸ்புக்கில் இயங்கிக் கொண்டிருப்பார் என்பது தெரியும். அதனால் அவரது பேஸ்புக் பக்கம் இயங்கும் கணினியின் ஐபி முகவரி, மின்னஞ்சலை தருமாறும் கோரினோம்.

தாக்குதலிற்கு 11 நாள் முன்னர் சஹ்ரான் தனது பேஸ்புக்கில் மற்றொரு வீடியோவை வெளியிட்டார். ஏப்ரல் 12ம் திகதிதான் அவரது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. பிரச்சனையின் தீவிரத்தை அவர்கள் உணரவில்லையென நினைக்கிறேன்“ என்றார்.


Recommended For You

About the Author: ஈழவன்