அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் – இம்ரான்கான் விசேட சந்திப்பு!

அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

நேற்றைய (செவ்வாய்க்கிழமை) சந்திப்பின் போது, இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற போது சிக்கன நடவடிக்கையாக அவர் பயணிகள் விமானத்திலேயே பயணித்தார். அத்துடன் அவர் அங்கு நட்சத்திர விருந்தகத்தில் தங்காமல் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதுவரின் இல்லத்தில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ட்ரம்பை இம்ரான்கான் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது.

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போர், பிராந்திய ஸ்திரத் தன்மைக்கு சவாலாக இருக்கும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் நீண்ட ஆலோசனை நடத்தினார்கள்.

முதலீடு மற்றும் தொழில்வாய்ப்புகளை உருவாக்கி பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் உறுதி பூண்டனர்.

அதேபோன்று பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்தவும் இருவரும் இணக்கம் வௌியிட்டனர்.

எனினும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்திருப்பது குறித்து இந்த சந்திப்பின்போது எந்தவித ஆக்கப்பூர்வமான முடிவுகளும் எட்டப்பட்டதாக தகவல்கள் வௌியாகவில்லை.

இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியிருந்தனர்.

அப்போது இம்ரான்கான் உடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கூறுகையில் “மிகவும் பிரபலமான, அதே வேளையில் புகழ்பெற்ற விளையாட்டு வீரரும், சிறப்பு மிக்க பிரதமருமான இம்ரான்கானை சந்தித்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்” என்று குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி ட்ரம்ப் பதில் அளித்தார்.

“கடந்த 2 வாரங்களில் நாங்கள் இந்த விவகாரத்தில் பல முன்னேற்றங்களை அடைந்திருக்கிறோம். இதில் பாகிஸ்தான் எங்களுக்கு பெரிதும் உதவியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் செப்டம்பர் பிற்பகுதியில் தலிபான்களுடன் அரசியல் ரீதியாக ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா அழுத்தத்தை கொடுக்கும்.

இதுவே நீண்ட நாள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்த வழி. நாங்கள் ஆப்கானிஸ்தானில் போரிட விரும்பினால் ஒருவாரத்தில் அந்தப் போரில் வெற்றி பெற்று விடுவோம். ஆனால் சுமார் ஒரு கோடி மக்கள் அதற்கு பலியாகிவிடுவார்கள். அமெரிக்கா அதை விரும்பவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: Editor