கீர்த்தி சுரேஷின் மெகா பிளான்!

மோகன்லால் ஜோடியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கு தெளிவான திட்டமிடலும் பயிற்சியும் எடுத்து வருகிறார்.

நடிகையர் திலகம் வெற்றிக்குப் பின் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கீர்த்தி நடிப்பில் சென்ற வருடம் தமிழில் வெளியான: தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சர்கார், சண்டக்கோழி 2 ஆகிய நான்கு படங்களிலும் சூர்யா, விக்ரம், விஜய், விஷால் என முன்னணி நாயகர்களுடன் மட்டும் இணைந்து நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து முன்னணி நாயகர்களுடன் நடிப்பது அல்லது நாயகியை மையப்படுத்தும் பிரதான கதாபத்திரத்தில் நடிப்பது என்பதை திட்டமாக வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அதற்கேற்றார் போலவே கதைகளையும் தேர்ந்தெடுத்து வருகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார் கீர்த்தி. மேலும் அவர் நாகர்ஜூனாவின் மன்மதுடு 2 என்ற தெலுங்கு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். நிதின் நடிக்கும் ரங்க் தே படத்தில் கீர்த்தி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பி.சி. ஸ்ரீராம் இணைந்துள்ளார்.

கீர்த்தியின் தாய் மொழியான மலையாளத்தில், மோகன்லால் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். ‘மரக்கார்-அராபிகளிண்டே சிம்ஹம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கி வருகின்றார். மலையாளத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகின்ற வரலாற்றுப் படமிது.

அதனைத் தொடர்ந்து, தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் நாயகியை மையமாகக் கொண்ட புதிய படமொன்றில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக கீர்த்தி தன் உடல் எடையை குறைக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

அதே சமயம், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கீர்த்தி நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது. இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இனி வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


Recommended For You

About the Author: Editor