சுழல் வலையில் சிக்கிய திருச்சி!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் திருச்சி அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூலை 23) திருநெல்வேலி இந்தியன் சிமெண்ட் நிறுவன கிரிக்கெட் மைதானத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் விளையாடின.

இதில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ரவி ஸ்ரீனிவாசன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய சேப்பாக்கம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.

சேப்பாக்கம் அணியில் அதிகபட்சமாக ஹரிஷ் குமார் 39 ரன்களும், கோபிநாத் 37 ரன்களும் எடுத்தனர். திருச்சி அணித் தரப்பில் சரவண் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.

149 என்பது எளிய இலக்காக இருந்தாலும் திருச்சி அணியின் விக்கெட்டுகள் துவக்கம் முதலே அடுத்தடுத்து விழத் தொடங்கின.

சுழல் பந்துவீச்சாளரான அலெக்ஸாண்டர் சிறப்பாகப் பந்துவீசி திருச்சி அணியின் பேட்டிங் வரிசையைத் தகர்த்தார்.

திருச்சி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சேப்பாக்கம் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திருச்சி அணியில் ஆதித்யா பரூவா அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். சேப்பாக்கம் அணிக்காகச் சிறப்பாகப் பந்துவீசிய சுழல் பந்துவீச்சாளர் அலெக்ஸாண்டர் 9 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இவருக்கே ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இன்று திண்டுக்கல்லில் நடைபெறும் ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியும் காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டி இரவு 7.15க்குத் தொடங்குகிறது.


Recommended For You

About the Author: Editor