சசிகலாவின் அருமை இப்போது புரிகிறதா?

கர்நாடக சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 23) நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்ததை அடுத்து அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், மஜத கட்சிகளின் 16 எம்.எல்.ஏ.க்களின் எதிர்ப்பை அடுத்து அவர் பதவி இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிகழ்வையும் 2017 பிப்ரவரி 17 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வையும் ஒப்பிட்டு, அமமுகவின் ஐடிவிங் சமூக தளங்களில் வீடியோ ஒன்றை பரப்பிவருகிறது.

பாஜகவின் பின்னணியில் இப்போது கர்நாடகாவில் ஆட்சி அகற்றப்பட்டது. ஆனால் 2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் சசிகலாவின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அரசை, கவிழ்க்க பாஜக பெரும் முயற்சி எடுத்தது. ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில் 11 எம்.எல்.ஏ.க்கள் அரசை எதிர்த்து வாக்களித்தனர்.

ஆனால் பாஜகவின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தான் சிறை செல்லும் நிலையிலும் இந்த அரசை நிலைநிறுத்திவிட்டு ஜெயலலிதாவின் சமாதியில் சபதமிட்டு சிறை சென்றார் சசிகலா. இப்போது கர்நாடகத்தின் மூத்த அரசியல் தலைவர்களான டி.சிவகுமார், முதல்வர் குமாரசாமி போன்றவர்களால் கூட முடியாததை அன்று சசிகலா தமிழகத்தில் நடத்திக் காட்டினார். பாஜகவின் சூழ்ச்சிகளை எதிர்த்து வென்ற சசிகலாவின் அருமை கர்நாடக காங்கிரசாருக்கு புரியும், இங்குள்ள எடப்பாடி பழனிசாமிக்கும் இப்போதைய ஆட்சியாளர்களுக்கும் புரியுமா?’ என்று போகிறது அந்த வீடியோ. அதில் சபாநாயகர் தனபால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் காட்சியும் இடம்பெறுகிறது.


Recommended For You

About the Author: Editor