அஜித்துடன் நடித்த அனுபவம்-வித்யா பாலன்!!

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஜோடியாக நடித்த வித்யா பாலன், அஜித்துடன் நடித்த அனுபவம்; ரீமேக் படங்களை விரும்பாத அவரது கொள்கையை நேர்கொண்ட பார்வை ஏன் சம்மதிக்க வைத்தது போன்ற தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

வித்யா பாலன் தன் நடிப்பிற்காகவும், தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களுக்காகவும் பெயர் பெற்றவர்.

பாலிவுட் நாயகிகள் நாயகனை சார்ந்திருக்கும் நாயகியாக கவனம் செலுத்திய நாட்களில், கதையையும், நடிப்பிற்கான வேலையுள்ள கதாபாத்திரங்களையும் துணிச்சலாக தேர்ந்தெடுத்து நாயகிகளுக்கான சினிமா மார்க்கெட்டை உருவாக்கியவர்களுள் முன்னோடியாக திகழ்பவர் வித்யா பாலன்.

இவர் நடித்த தி டெர்டி பிக்சர், கஹானி ஆகியவை அதற்கான சான்றாக அமைந்தது.

ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதைக் கொள்கையாக கொண்டவர் வித்யா பாலன். ஆனால், பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க சம்மதித்த வித்யா பாலன் அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கினார். தி இந்து நாளிதழுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அது குறித்து மனம் திறந்துள்ளார் வித்யா பாலன்.

வித்யா பாலன் ரீமேக் படங்கள் சவுகரியமாக பணம் பண்ணும் ஒரு வேலை என்றே கருதி வருபவர். போனி கபூர் முதன் முதலில் ‘பிங்க்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யப்படுவதாகக் கூறிய போது, ‘ஏன் ரீமேக்’ என்றே கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அப்படம் பேசும் விஷயம், தற்போது நிலவும் சூழல் ஆகியவற்றை பரிசீலித்து தமிழுக்கும் நேர்கொண்ட பார்வை அவசியம்தான் என்பதை உணர்ந்துள்ளார் வித்யா பாலன்.

“போனி கபூர் படத்தின் நாயகன் அஜித் என்று கூறிய போது எனக்கு உண்மையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. என்னுடைய முதல் தமிழ்ப் படம் போனி கபூர் தயாரிக்க அஜித்துடன் நான் சக நடிகை ஆகியிருக்கிறேன்” என அவ்வாய்ப்பு கொடுத்த மகிழ்ச்சியை கூறியிருக்கிறார் வித்யா பாலன்.

பெண்கள் ‘வேண்டாம்’ அல்லது ‘நோ’ என்றால் அது ‘நோ’ தான் என்பதை வலியுறுத்தும் ஒரு படமாதலால் இத்தகைய ஒரு கனமான விஷயத்தைக் மக்களிடம் கொண்டு செல்ல அஜித் போன்ற மெகா ஸ்டார்கள் அவசியம் என்று உணர்வதாக வித்யா பாலன் தெரிவித்தார்.

“அஜித் ஒரு மெகா ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் அவருக்கு இருக்கிறது. எனவே இவரிடமிருந்து படத்தின் முக்கியமான செய்தி ஒன்று மக்களிடம் செல்லும் போது அதற்கு பரவலான வரவேற்பு இருக்கவே செய்யும்” என்றார் வித்யா பாலன்.

அஜித்-வித்யா பாலன் படத்தில் தோன்றும் காட்சிகள் மட்டும் பிங்க் படத்திலிருந்து வேறு படும். அஜித்தின் மனைவியாக இப்படத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார். அஜித்துடன் நடித்த அனுபவத்தைக் கூறும் போது, ‘அஜித்தின் ஆளுமை என்னைச் சாய்த்து விட்டது. ரசிகர்களைத் தன் பின்னால் பெரிய அளவில் திரட்டிய ஒரு ஸ்டார் என் முன்னால் நிற்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருசாதாரண மனிதன் ஒருவருடன் நான் இருப்பதாகவே உணர்ந்தேன். காரணம் அவர் அவ்வளவு எளிமையாக இருந்தார். உண்மையைக் கூற வேண்டுமென்றால் நான் பார்ப்பது அஜித் அல்ல, அஜித் போன்ற உருவ ஒற்றுமை உள்ளவருடன் தான் நடிக்கிறோம் என்றே நினைத்தேன். அவ்வளவு எளிமையானவராக அவர் இருக்கிறார்’.

மேலும் அஜித் வித்யாபாலனிடம் கூச்சப்பட்ட விஷயத்தையும் கூறியுள்ளார்: “அஜித்தின் ‘தல’ இமேஜ் பற்றி அவரிடம் நான் பேசிய போது அவர் உண்மையில் கூச்சப்பட்டார்” என்றார் வித்யா பாலன்.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா கபூர் நடித்த நேர்கொண்ட பார்வை திரைக்கு வரவிருக்கிறது. அஜித் – வித்யா பாலனுக்கு படத்தில் வரும் மெலடி பாடலான ‘அகலாதே’ என்ற பாடல் நாளை வெளியாகவிருக்கிறது.


Recommended For You

About the Author: Editor