பாலிவுட்டைத் திரும்பி பார்க்கவைத்த விஜய்!!

விஜய் தேவரகொண்டாவின் புதிய படமான டியர் காம்ரேட் வெளியாவதற்கு முன்பே பிரபல பாலிவுட் இயக்குநர் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.

அறிமுக இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டியர் காம்ரேட்.

கீதா கோவிந்தம் திரைப்படத்துக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 26ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், டியர் காம்ரேட் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் பெற்றுள்ளார். இந்தப் படத்தை இவரது தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடித்த படங்களில் பாலிவுட்டில் ரீமேக்காகும் மூன்றாவது படமாக மாறியிருக்கிறது டியர் காம்ரேட். 2016ஆம் ஆண்டில் இவர் நடித்த பெல்லி சூப்புலு இந்தியில் மிட்ரான் ஆனது. 2017ஆம் ஆண்டு இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி இந்தியில் கபீர் சிங் ஆனது. ஷாகித் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்தப் படம், கடும் சர்ச்சைகளையும் கடந்து பாக்ஸ் ஆபீஸில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor