வட – கிழக்கில் 4ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்.

நாடுமுழுவதும் 16 ஆயிரத்து 800 பட்டதாரி பயிலுனர்களை நியமிக்கும் திட்டத்தில் வடக்கு – கிழக்கில் 4 ஆயிரத்து 49 பட்டத்தாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், வழமையை விட இம்முறை அதிகளவில் வெளிவாரிப் பட்டதாரிகள் பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் மேலும் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைய 20 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதனடிப்படையில் 3 ஆயிரத்து 200 பட்டதாரிகளுக்கு முதல் கட்டமாக 2018ஆம் ஓகஸ்ட் மாதம் நியமனம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 16 ஆயிரத்து 800 பட்டதாரி பயிலுனர்களுக்கு வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் நியமனம் வழங்கப்படவுள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட அடிப்படையில் வரும் ஜூலை 30, 31, மற்றும் ஓகஸ்ட் 1,2ஆம் திகதிகளில் பிரதமரினால் வழங்கிவைக்கப்படும்.

பட்டம் வழங்கப்பட்ட திகதி உள்ளடங்களான காரணிகளைக் கருத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படுகின்றது.

பயிலுனர் காலத்தில் மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படவுள்ளது. நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஒரு வருடம் பயிற்சியை நிறைவு செய்யவேண்டும்.

வடக்கு மாகாணத்தில் ஆயிரத்து 907 பட்டதாரி பயிலுனர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 277 பேரும், கிளிநொச்சியில் 141 பேரும் மன்னாரில் 160 பேரும் முல்லைத்தீவில் 129 பேரும் வவுனியாவில் 200 பேரும் நியமிக்கப்படவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 142 பட்டதாரி பயிலுனர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் மட்டக்களப்பில் 261 பேரும் திருகோணமலையில் 195 பேரும் அம்பாறையில் 686 பேரும் நியமிக்கப்படவுள்ளனர் – என்றுள்ளது


Recommended For You

About the Author: ஈழவன்