போா் காலத்திலும் கல்விக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது இல்லை-ரவிகரன்!!

கடந்த காலத்தில் இடம்பெற்ற போர்ச் சூழலுக்குள், பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்விச் செயற் பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதனால் அந்த இக்கட்டான போர்ச் சூழலுக்குள்ளும் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பெற்றோர்கள் என்றும் துணையாக இருந்து அற்ணிப்புடன் செற்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் அமைந்துள்ள கதிர் கற்கை வளாகத்தின், புதிய கட்டடத் திறப்புவிழாவில் 21.07.2019 இன்றைநாள் கலந்துகொண்டு கருத்துரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் ஒரு யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரம், தனித்தனியே பிரிவுகள் உருவாக்கப்பட்டு எங்களுடைய மக்களுக்கான எழுச்சியுடன் சம்பந்தப்பட்ட வகையிலே, ஒவ்வொரு துறைகளாக உருவாக்கப்பட்டு,

கல்விக்காக கல்விக்கழகம் உருவாக்கப்பட்டு பாடசாலை மாணவர்களுடைய கல்விக்கு, பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

அந்த வகையில் பின்பு பலருடைய சூழ்ச்சியால், எங்களுடைய மக்களின் தேவைகளுக்காக இறங்கிப் போராடிய இளைஞர்களுடைய அந்தக் காலம் மௌனிக்கப்பட்ட நிலையில், கல்வியில் குறிப்பிட்டளவு காலத்தில், வெகுவான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

ஆனால் அதன் பின்பு ஒரு மீட்சி பெற்றதைப்போல, எங்கள் மாணவர்களின் உயர்ச்சி படிப்படியாக மேலாங்கி வருகின்றது.

எங்களுடைய ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை போதித்து எமது மாணவர்களை கல்வியில் உயர்த்திக்கொண்டு வருகின்றனர். இதை யாரும் மறுக்க முடியாது.

எமது மாணவர்கள் தங்களுடைய கல்விச் செயற்பாட்டில் ஒழுங்கான வரவுகளைப் பேணி வந்தால், கல்வியில் ஒரு உயர்ந்த நிலையை அடைய முடியும்

மேலும் பிள்ளைகளுடைய கல்விச் செயற்பாடுகளுக்கு, பெற்றோர்ககள் தங்களை முழுமையாக அற்பணிக்கவேண்டும்.

ஏன் எனில் இந்தக் கல்வியினூடாகத்தான் நாம் இழந்த இழப்பீடுகளை ஈடுசெய்யமுடியும். பொதுவாக நாங்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் நொந்து நூலாகிப்போய் இருக்கின்றோம்.

அந்தவகையிலே இந்தக் கல்வியினூடாகத்தான் எமது சமூகத்தை, எங்களுடைய இனத்தினை முன்னேற்றமுடியும் என்ற எண்ணத்துடன், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவித்து அற்பணிப்போட செயற்படவேண்டும் என்றார்.


Recommended For You

About the Author: Editor