சந்திரயான் 2 விண்கலத்துடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி மார்க் 3!

நிலாவை ஆராயும் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நிலாவில் நீர்ம மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்த சந்திரயான் விண்கலத்தை தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ, தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள 978 கோடி ரூபாய் செலவில் சந்திரயான் -2 திட்டத்தை முன்னெடுத்தது.

இதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான் -2, விக்ரம், பிரக்யான் ஆகிய விண்கலங்களை தாங்கிய ஜி.எஸ்.எல்.வி. மார்க் -3 ராக்கெட் கடந்த 15-ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டதால் ராக்கெட் ஏவுவது நிறுத்தப்பட்டு, தொழில் நுட்ப கோளாறு 3 நாட்களில் சரி செய்யப்பட்டது.

இதையடுத்து, மதியம் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்து சென்ற காட்சியை நாடெங்கிலும் உள்ளோர் கண்டு களித்தனர்.

ஏவப்பட்ட 16 நிமிடத்தில் பூமியில் இருந்து 40400 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட். அப்போது அந்த ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவியின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தது.

புவியின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் சிவன் மகிழ்ச்சியுடன் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.தொழில் நுட்ப குறைபாட்டால் ஏற்பட்ட சின்ன சறுக்கலில் இருந்து வீறுகொண்டு எழுந்த, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆற்றலுடன் செயலாற்றி வெற்றி கண்டதை அவர் விவரித்தார்.

ராக்கெட் ஏவப்படுவதை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தமது அலுவலக அறையில் இருந்தபடியே தொலைக்காட்சியில் கண்டு களித்தார். மார்க் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்த போது அவரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

ராம்நாத் கோவிந்த்:

சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அனைத்து இந்தியர்களும் பெருமை கொள்ள வேண்டிய தருணம் என்று கூறியுள்ளார். விஞ்ஞானிகள், பொறியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய திட்டங்களை முன்னெடுப்பதில் இஸ்ரோ, ஆசானாக இருக்க வேண்டும் என்றும் பாராட்டியுள்ளார்.

சுமார் 50 நாட்களில் நிலவின் தென் துருவத்தை சந்திரயான் 2 அடையும் என்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அது வழிவகுக்கும் என்றும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அறிவுசார் அமைப்புகளை இத்திட்டம் வளப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், சந்திரயான் இரண்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி:

இதனிடையே சந்திரயான் 2 ஏவப்படுவதை, தனது அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி பார்த்தார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மிளிறும் வரலாற்றின் சிறப்பான தருணங்கள் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அறிவியலின் புதிய எல்லையை அளக்க விரும்பும் 130 கோடி இந்தியர்களின் உறுதியையும், விஞ்ஞானிகளின் வலிமையையும் சந்திரயான் 2 காட்டுவதாக மோடி குறிப்பிட்டுள்ளார். அறிவியல், உயர் தர ஆராய்ச்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள இளைஞர்களை சந்திரயான் 2 ஊக்கப்படுத்தும் என்றும் பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு:

இதேபோல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும், வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், சந்திரயான்2 விண்ணில் ஏவப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த சாதனை என்றும், இந்திய விஞ்ஞானிகள் சிறப்பு பாராட்டுக்கு உரியவர்கள் என்றும் கூறியுள்ளார். நாட்டின் பெருமையை விஞ்ஞானிகள் உயர்த்தி விட்டதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மக்களவையிலும் சந்திரயான் 2 திட்டத்திற்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


Recommended For You

About the Author: Editor