பிரித்தானியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஈரான்!

சிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலினை விடுக்க வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கையை ஈரான் நிராகரித்துள்ளது.

பாரசீக வளைகுடாவில் ஹோர்முஷ் நீரிணைப் பகுதியில் சென்று கொண்டிருந்த பிரித்தானிய எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

ஈரான் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்ததாகவும், ஈரான் புரட்சிகரப் படையினரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தவறான வழியில் சென்றதால் சிறை பிடித்ததாகவும் ஈரான் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் ஈரானினால் சிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் பிரித்தானியாவின் குறித்த கோரிக்கையினை ஈரானின் ஹோர்முஷ்கன் மாகாண துறைமுக மற்றும் கடலோர பாதுகாப்பு அமைப்பின் பொது இயக்குநர் அல்லா-முராத் அஃபிஃபிபூர் நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எங்களது மீன்பிடி படகு மீது பிரித்தானியாவின் ‘ஸ்ரெனா இம்பீரோ’ கப்பல் மோதிய விபத்து தொடர்பான விசாரணை முடியும் வரை, அந்தக் கப்பலை விடுவிக்கமுடியாது. அந்த விசாரணை எவ்வளவு விரைவில் முடிவடைகிறதோ, அவ்வளவு விரைவில் அந்தக் கப்பல் விடுவிக்கப்படும்.

தற்போது அந்தக் கப்பல் பாதுகாப்பான இடத்தில் நங்கூரம் இடப்பட்டுள்ளது. கப்பல் பணியாளர்கள் அனைவரும் அதில் நலமுடன் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

குறித்த கப்பல் விடுவிக்கப்படுவது, விபத்து குறித்த விசாரணைக்கு அதன் பணியாளர்கள் அளிக்கும் ஒத்துழைப்பையும், அதுதொடர்பாக எங்களுக்குத் தேவைப்படும் ஆதாரங்கள் கிடைப்பதையும் பொருத்தது.

இந்த விசாரணையை கூடிய விரைவில் நிறைவு செய்வதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்’ என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor