எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது

கும்பகோணத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், திருச்சி சட்டக்கல்லூரியில் படித்துவந்தார்.
மாணவிக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மாணவி, திருச்சியில் தனது தோழிகளுடன் தனி வீடு எடுத்து தங்கிப் படித்துவந்துள்ளார். இதற்கிடையே, நாகப்பட்டினம் சந்திரம்பாடியைச் சேர்ந்த தவச்செல்வன் என்பவர், ஒருதலையாக அந்த மாணவியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துவரும் தவச்செல்வன், மாணவியை அடிக்கடி சந்தித்து, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார்.

மேலும், அவரை பல நாள் பின்தொடர்ந்துவந்தாகவும், அதற்கு மாணவி மறுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று பிற்பகல், மாணவி தனது தோழியுடன் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தவச்செல்வன், தன்னை காதலிக்கும்படி மாணவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்த மாணவியின் தோழி, தகராறு சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளார். இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்வதைப் பார்த்து வீட்டு ஓனரை கூப்பிட தோழி சென்றிருக்கிறார். அப்போது, தான் கொண்டுவந்த பெட்ரோலை மாணவியின்மீது ஊற்றி தீவைத்துள்ளார் தவச்செல்வன். `எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது’ எனக் கூறிக்கொண்டே மாணவியின்மீது தீயைப்பற்ற வைத்துள்ளார்.

திருச்சி மருத்துவமனை

பின்னர், மாணவியின் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் தவச்செல்வன். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருவத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையின் தீக்காய பிரிவில் சேர்க்கப்பட்டு, அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மாணவிக்கு 40 முதல் 45 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருதலைக் காதலால் மாணவியை இளைஞர் ஒருவர் தீவைத்து எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor