
மார்க்கம் தடை செய்யாத விசயங்களில் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் விரும்பியதை செயல்படுத்தவேண்டும்.
இவ்வாறு செயல்படுத்தும் போது அவர்களின் ஆசை நிறைவேறுவதுடன் கணவன் மீதும் மதிப்பும் மரியாதையும் உயரும்.
உதாரணமாக எதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னால் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும்.
முடியவில்லையானால் இன்னொரு நாளில் அழைத்துச் செல்வதாக கூறி அதன்படி நடக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் கணவன் மனைவி உறவு சீர்படும், சிறப்பாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் இவ்வாறே நடந்து கொண்டார்கள்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தாமாகவே அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள்.
அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.
(பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது உனக்கு போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ! என்று கூறினார்கள்.
நூல்: புகாரீ
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நானாக சடைந்து விடும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹுஅன்ஹா),
அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் விளையாட்டை பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் தடையாக இருக்கவில்லை.
மாறாக ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களுக்காக தானும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்கு தன் தோளை விளையாட்டை பார்க்கும் சாதனமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள்.
இறைத் தூதராக இருந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பும் கொடுத்துள்ளார்கள். எனவே, இந்த அழகிய வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் திருமண வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.