கன்னியா போராட்டத்தில் பங்குகொண்ட பல இளைஞர்களது உள்ளக்குமுறல்!!

2009இன் பின்னர் தமிழர்தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கோ போராட்டங்களிற்கு அழைப்புவிடுக்கும் அமைப்புகளிற்கோ எந்தவொரு இலக்குமிருப்பதில்லை என்பதையே கட்டியம் கூறுகிறது அண்மையில் தென்கைலை ஆதீனத்தால் அழைப்புவிடுக்கப்பட்டு நடாத்தப்பட்ட கன்னியா ஆலய நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் ஆகும்.

போராட்டத்திற்கு அழைப்புவிடுப்பர்களிடம் அப்போராட்டம் தொடர்பான இலக்கோ தெளிவான குறிக்கோளோ இல்லாத போது பல்வேறு இடங்களிலிருந்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வருபவர்களின் உளவுரன் உடைந்துபோவதுடன் கணிசமானவர்கள் இவ்வாறான போராட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருக்க வழிசெய்துவிடுகிறது. திருகோணமலைப்போராட்டமும் ஒரு திட்டமிடப்பட்ட இலக்கு அல்லது குறிக்காள் இல்லாது நிறைவுற்றிருக்கிறது. போராட்டக்காரர்கள், கன்னியா நில ஆக்கிரமிக்கும் பிரதேசத்திற்கு செல்லமுடியாதவாறு சிறிலங்கா பொலிசாராலும் ராணுவத்தினராலும் கன்னியா வாயிலிலே நிறுத்தப்பட்டார்கள். இதற்கு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காது ஓரமாய் போய் சிவபுராணம் படிப்போம் வாருங்கள் என்று போராட்டக்காரர்களை அழைத்ததும் போராட்ட முடிவில் சாப்பிட்டுச்செல்லுங்கள் என்றுரைத்ததும் போராட வந்தவர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியது.

இதை வெளிப்படையாகவே கேட்டு முல்லைத்தீவை சேர்ந்த இளைஞன் எல்லோர் முன்னாலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது வைரலாக வீடியோவாக பரவிவருகின்றது.தற்போதுள்ள நிலையில் எல்லோரது ஆதங்கமும் இதுதான்.

குறித்த போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த தென்கைலை ஆதீனத்தின் குருமுதல்வரும் ஆலய நில உரிமையாளரும் பொலிசாரின் பாதுகாப்பில் நில ஆக்கிரமிக்கப்படும் இடத்திற்கு அழைத்துச்செல்லும் போது எமது நிலங்களை அபகரித்து அங்கே கடைவைத்திருக்கின்ற சிங்கள காடையன் ஒருவனால் தென்கைலை ஆதீன குருமுதல்வர் மீது சுடுதேநீர் ஊற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் அழைத்துச்சென்ற பொலிசார் முன்னிலையிலே நடைபெற்றுள்ளது இதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத பொலிசார் தாம் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட குருமுதல்வரை வைத்தியசாலையில் போய் படுக்குமாறு கோரியுள்ளார்கள் சிங்களப்பொலிஸ்காரர்கள்.
பௌத்த தேரருக்கு சமனாக மதிக்கத்தக்க குருமுதல்வர் மீது சிங்களக்காடையர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான செயலை நேரில் கண்டும் நடவடிக்கை எடுக்காமல் பொலிசார் பாரபட்சம் காட்டியமை ஆச்சரியப்படுவதற்கில்லை காரணம் இது பௌத்த நாடு.பௌத்தத்திற்கு முன்னுரிமை என்று நம்மவர்களாலேயே ஒப்புதலளிக்கப்பட்ட நாட்டில் வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? போராடிக்கொண்டேதான் இருக்கமுடியும் ஆனால் போராட்ட களத்தை திறக்க நினைப்பவர்களிடம் தெளிவான உறுதியான சில சிந்தனைகள் இருக்கவேண்டும் இல்லையேல் வெகுவாக குறைந்து வரும் போராட்டத்திற்கான மக்கள் எழுச்சி நாளடைவில் முற்றாக செயலிழந்துபோய்விடும் கன்னியா போராட்டத்தில் பங்குகொண்ட பல இளைஞர்களது உள்ளக்குமுறலிது.


Recommended For You

About the Author: Editor