முடக்கத்தான் கீரை தோசை!!

கீரையைப் போன்ற உணவும் இல்லை, நோய் நீக்கும் வைத்தியனும் இல்லை’ என்பது சித்தர்கள் வாக்கு. முடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும்.

துவர்ப்புச் சுவையுடைய இந்தக் கீரை, பல மருத்துவக்குணங்கள் அடங்கிய ஓர் அற்புதமான கீரை.

Cardiospermum Halicacabum என்ற அறிவியல் பெயர் கொண்ட முடக்கத்தான் கீரை, முடக்கு + அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது.

இந்த‌க் கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம்.


என்ன தேவை?

தோசை மாவு – 3 கப்

முடக்கத்தான் கீரை – கைப்பிடி அளவு

பச்சை மிளகாய் – 2

சீரகம் – அரை டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முடக்கத்தான் கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை தோசை மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும் (மாவிலேயே உப்பு இருக்கும். தேவைப்பட்டால், சிறிதளவு உப்பு சேர்க்கலாம்). தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிதளவு எண்ணெய் தடவி, மாவைத் தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகு சேர்த்தும் அரைக்கலாம்.
என்ன பலன்?

உடலில் இருக்கும் வாதத்தன்மையைக் கட்டுபடுத்தி உடலிலுள்ள அனைத்து மூட்டுகளின் வலியைப் போக்கும். தோல் வியாதிகளுக்குச் சிறந்த நிவாரணமாகவும் இருக்கிறது. பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளையும் முடக்கத்தான் தீர்க்கும்.


Recommended For You

About the Author: Editor