சுதந்திரத்துக்கு எல்லை உண்டா?

விமர்சனம்: ஆடை

தன் பிறந்தநாள் இரவை நண்பர்களுடன் கொண்டாடும் பெண், காலையில் எழும் போது ஆடையின்றி ஒரு பெரும் கான்கிரீட் வெளிக்குள் அகப்பட்டுக்கொண்டால் என்னவாகும்?
வி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அமலா பால் காமினி என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிலிருந்து டிரெய்லர் வரை சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பி வருகிறது. இவையனைத்தையும் கடந்து ஆடை படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதன் பேசுபொருள் என்னவாகயிருக்கும் என்பதாகவேயிருந்தது.
காமினியின் உலகம்
கேரளாவிலுள்ள திருவாங்கூர் சமஸ்தானத்தில், முலை வரி கொடுமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தன் முலையறுத்த நங்கெலியின் கதையுடன் படம் தொடங்குகிறது.
பிரபல தொலைக்காட்சியில் தன் குழுவினருடன் பிராங்க் ஷோ செய்யும் சுதந்திரக் கொடி (எ) காமினி, தன் விருப்பத்துக்கும் வேகத்துக்கும் எதையும் தடையாகக் கருதாமல் துணிச்சலாக வாழும் மனப்பான்மை கொண்டவர். அதனாலேயே தன் பிராங்க் ஷோவை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லத் தயங்காதவர். அவர் பணிபுரியும் டிவி சேனல் பில்டிங் காலி செய்யப்பட்டு வேறு இடத்திற்கு ஒருநாள் மாற்றப்படுகிறது. காமினி பிறந்தநாளும் அதே நாளென்பதால் காமினி & கோ அந்தக் காலி பில்டிங்கில் குடித்து பார்ட்டி செய்ய முடிவு செய்கின்றனர்.
‘பெட்’ கட்டினால் எதையும் செய்யத் துணியும் காமினி, ஒரு இரவு முழுவதும் ஆடையில்லாமல் தன்னால் இந்த அலுவலகத்தில் இருக்க முடியும் என போதையில் சவால் விடுகிறார். விடியும் மறுநாளில் காமினி ஆடையின்றி எழுகிறார். பதற்றத்தில் ஓடி ஒளியும் அவர், நண்பர்களை உதவிக்கு அழைக்க ஒருவர் கூட அங்கேயில்லை. உடலை மறைக்க எதுவுமின்றி, உதவிக்கு அழைக்க யாருமின்றி தனியே மாட்டிக்கொள்ளும் காமினி மீண்டாரா… ஆடையின்றி அவர் மாட்டிக் கொண்டது எப்படி போன்ற கேள்விகளுக்கான பதிலே ஆடை படத்தின் மீதிக் கதை.
மேயாத மான் படத்தின் மூலம் நகைச்சுவை கலந்த மென்மையான காதலைக் கொடுத்த ரத்னகுமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அடுத்த படம் இது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வந்திருக்கும் ரத்னகுமார், தன் திரைமொழியை மேலும் கூர்மையாக்கி பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்க முயன்றுள்ளார்.
காமினி என்ற கதாபாத்திரமாகவே படம் முழுவதும் வலம் வருகிறார் அமலா பால். முழுப் படத்தையும் சுமந்து செல்லும் கதாபாத்திரமென்பதால் ஒரு நடிகையாக கவனத்துடனே செய்திருக்கிறார் எனலாம். ஆடையின்றி நடிப்பதற்குத் துணிச்சலையும் கடந்து கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கையும் வேண்டும் என நிரூபித்திருக்கிறார் அமலா பால்.
படத்தில் சிறப்பம்சாக கூற வேண்டியது விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு. சிந்துபாத் படத்தில் பணியாற்றியவர் இவர். ஒளியமைப்பு, வண்ணங்கள், அசைவுகள் என ஆடை படத்தின் மனநிலையை அழகாகக் கொடுத்துள்ளார். நிர்வாணத்தை உறுத்தாமலும் கதாபாத்திரத்தின் பதற்றத்தை நிழல்கள், கோடுகள் வழியே காட்டியதிலும் கவனம் ஈர்க்கிறார். அடுத்ததாக சம்பத் ஆழ்வாரின் (ஹை வேபி.கேபேட்ட) ஒலியமைப்பு படத்தில் குறிப்பிடும்படி உள்ளது. பாடல்கள், பின்னணி இசை, படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் படத்தில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.
காமினி பேச மறந்த உலகம்
படத்தின் முன்னோட்டங்களைப் பார்த்து ஆடையின் பேசுபொருள் மீதான எதிர்பார்ப்பு, படத்தின் பயணத்தை அறிந்தவுடன் சுருங்கி விடுகிறது. படத்தில் அமலா பால் சந்திக்கும் சிக்கலுக்கான காரணத்தைக் கூறும் ஃப்ளாஷ்பேக் தர்க்கம் நியாயமென்றாலும், சட்டென வேறொரு படத்திற்கு வந்ததைப் போல அந்நியமான உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.
படத்தின் தலைப்பு; பெண் உடல் மீதான பார்வையை, ஆடைத் தேர்வைத் தீர்மானிக்கும் ஆண்களின் உலகம்; உடல் மீதான ஆடையின் அரசியல் எனக் கதைக்குள் முக்கியமான விஷயங்களைப் பேச அவ்வளவு வாய்ப்பிருந்தும் வழக்கமாகக் கடக்கும் ஒரு பிரச்சாரப் படத்தின் நெடியைப் படத்தின் முடிவில் கொடுத்துவிடுகிறார் இயக்குநர். ஆரம்பத்தில் எழும் கேள்விகளுக்கு விடையாக வரும் பதில்கள் ஒவ்வொன்றும் தெரியவரும்போது முரண்பாடுகளும் குழப்பங்களுமாக இருக்கின்றன. பிராங்க் ஷோ மீதான எதிர் நிலையை பேசியது அவசியமென்றாலும், ஆடை மீதான கவனம் திசை திரும்பி தடம் மாறியது போல ஆகிவிட்டது. படம் பேசும் சுதந்திரமும், திரைக்கதையில் நங்கெலியை ‘கனெக்ட்’ செய்யும் விதமும் ‘கன்வின்சிங்காக’ இல்லை.
முற்றிலும் புதிய கோணத்தில், விரிவான தளத்தில் ஒரு கதையைத் தமிழ் சினிமா எப்போது கொடுக்கும் என்ற ஏக்கமே படத்தின் முடிவில் மிஞ்சுகிறது.
நன்றாக வந்திருக்க வேண்டிய ஆடை ஏமாற்றமளித்தாலும், பெண்களை மையப்படுத்தும் சினிமாவில் இது பாய்ச்சலை ஏற்படுத்தும் எனக் கூறலாம்.

Recommended For You

About the Author: Editor