எம்.பி. ஆன இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த டிஎஸ்பி!

ஆந்திராவில் எம்.பி.-யான முன்னாள் இன்ஸ்பெக்டரும் டி.எஸ்.பி.யும் ஒருவருக்கு ஒருவர் சல்யூட் அடித்துக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆந்திர மாநிலம் கதிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கொரந்தலா மாதவ்.

கடந்த ஆண்டு இவரது எல்லைக்கு உட்பட்ட ததிபாத்ரி பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இந்த கலவரத்தை அடக்க முடியாமல் போலீசார் அங்கிருந்து ஓடிவிட்டதாக அப்போதைய அனந்தபூர் தொகுதி எம்.பி. திவாகர் ரெட்டி குற்றம் சாட்டினார்.

மேலும் போலீசை பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். அங்கு கலவரப் பணியில் ஈடுபட்டு இருந்த மாதவ், ‘போலீசை பற்றி எம்.பி.க்களோ, எம்.எல்.ஏ.க்களோ வாய்க்கு வந்தபடி பேசினால் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம். காவல் துறையை கேவலப்படுத்துபவர்களின் நாக்கை அறுப்பேன்” என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு திவாகர் ரெட்டியும் ஆவேசமாக பதில் அளித்தார். உனது காக்கி சட்டையை கழற்றிவைத்து விட்டு வா பார்க்கலாம் என்றார். இச்சம்பவத்துக்கு பிறகு அந்த பகுதி பொது மக்களிடம் மாதவுக்கு செல்வாக்கு அதிகரித்தது.

இதையறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அவருக்கு பாராளுமன்ற தேர்தலில் அனந்தப்பூர் மாவட்டம் இந்துப்பூர் தொகுதியில் போட்டியிட ‘சீட்’ ஒதுக்கியது. இதனால் மாதவ் தனது போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் ராஜினாமா ஏற்கப்படாததால் அவரது வேட்பு மனுவை நிராகரிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது.

உடனே மாதவ் மாநில நிர்வாக டிரிபியூனலில் மனு தாக்கல் செய்து தனது ராஜினாமாவை ஏற்க வைத்தார். பின்னர் இந்துப்பூர் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.ஊறொ

இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கிருஷ்தப்பா நிம்மலா போட்டியிட்டார். இதில் 1 லட்சத்து 40,748 ஓட்டுகள் வித்தியாசத்தில் மாதவ் அமோக வெற்றி பெற்றார்.

மாதவ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போது அவருக்கு டி.எஸ்.பி.யாக மெகபூப் பாஷா பணியாற்றினார். தற்போது சி.ஐ.டி. பிரிவு டி.எஸ்.பி.யாக இருக்கும் மெகபூப் பாஷா எம்.பி.ஆகி விட்ட மாதவை சந்தித்தார்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சல்யூட் அடித்துக்கொண்டனர். இந்த காட்சிகள் வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து மாதவ் கூறுகையில், நான் தான் முதலில் டி.எஸ்.பி.க்கு ‘சல்யூட்’ அடித்தேன். அவர் பதிலுக்கு சல்யூட் அடித்தார். நான் அவரை மதிக்கிறேன். நாங்கள் இருவரும் பரஸ்பரம் மரியாதை செலுத்தி கொண்டோம் என்றார்.


Recommended For You

About the Author: Editor