தங்கமாக மாறிய வெள்ளிப் பதக்கம்!

ஆசியப் போட்டியில் 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் இந்திய அணி வென்ற வெள்ளிப் பதக்கம், அதிர்ஷ்டவசமாகத் தங்கப் பதக்கமாக மாறியுள்ளது.
தங்கம் வென்ற பக்ரைன் அணி வீராங்கனை ஊக்க மருந்துச் சோதனையில்

சிக்கியுள்ளதால் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியப் போட்டிகள் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டில்தான் கலப்பு 400 மீட்டர் ஓட்டப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இந்திய அணி சார்பில் ஹிமா தாஸ், மசேத்திரா பூவம்மா, ஆரோக்கிய ராஜீவ், முகமது அனாஸ் அடங்கிய இந்திய அணி கலந்துகொண்டது. சென்ற ஆண்டின் இறுதியில் இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு இடையூறாக ஓடியதாகத் தங்கம் வென்ற பக்ரைன் அணி வீரர்கள் மீது புகாரளிக்கப்பட்டது. ஆனால், அப்புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
https://www.tamilarul.net/
இந்த நிலையில் பக்ரைன் அணியில் இடம்பெற்றிருந்த கெமி அடிகோயா ஊக்க மருந்துச் சோதனையில் சிக்கியுள்ளார். அவர் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று தடகள ஒருங்கிணைப்பு சம்மேளனம் (AIU) உத்தரவிட்டுள்ளது. மேலும், 2018 ஆகஸ்ட் 24 முதல் 2018 நவம்பர் 26 வரையில் கெமி பங்கேற்ற போட்டிகளும் அவர் வென்ற பதக்கங்களும் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் கெமி இடம்பெற்ற பக்ரைன் அணியின் தங்கப் பதக்கம் திரும்பப் பெறப்படுகிறது. வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்குத் தங்கப் பதக்கம் அளிக்கப்படும்.
இந்தியாவுக்கு மற்றொரு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, ஆசியப் போட்டியின் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அனு ராகவனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற கெமியிடமிருந்து தங்கப் பதக்கம் பறிக்கப்படும் என்பதால் நான்காவது இடம் பிடித்த அனு ராகவனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கவுள்ளது.

Recommended For You

About the Author: Editor