இந்திய அணியின் எதிர்காலம் என்ன?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி பல்வேறு வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறது.
மூன்றாவது முறையாக உலகக் கோப்பையைக் கையிலேந்தும் கனவு நனவாகாத நிலையில், 2023ஆம் ஆண்டில் இந்தியாவில்

நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பைத் தொடருக்கு இந்திய அணி இப்போதிலிருந்தே ஆயத்தமாக வேண்டும். இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் நம்பர் 4 இடத்துக்குப் பொருத்தமானவர் யார் என்ற கேள்விக்கான விடை கடைசி வரை கிடைக்கவே இல்லை. தொடர் தொடங்குவதற்கு முன்னரும் இதே கேள்வி இருந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமலேயே களமிறங்கிய இந்திய அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

https://www.tamilarul.net/
’நம்பர் 4’ ஒரு தீராத பிரச்சினை
யுவராஜ் சிங் அணியிலிருந்து நிராகரிக்கப்பட்டதிலிருந்து நம்பர் 4 இடம் காலியாகவே உள்ளது. அந்த இருக்கையில் அஜிங்கியா ரஹானே, அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர், லோகேஷ் ராகுல், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் போன்ற பல வீரர்களை அமரவைத்துப் பார்க்கும் இந்திய அணியின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. மேற்கூறிய வீரர்கள் திறமைசாலிகள் என்றாலும் தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறுகின்றனர். உலகக் கோப்பை போன்ற மிகப் பெரிய தொடர்களில் மிடில் ஆர்டர் பேட்டிங் மிக முக்கியமானது. பந்துவீச்சு, ஓப்பனிங் பேட்டிங் எனப் பலமாக இருந்தாலும் மிடில் ஆர்டர் சொதப்பினால் போட்டியே கையை விட்டுப்போய்விடும். மிடில் ஆர்டர் சொதப்பலால்தான் உலகக் கோப்பைத் தொடரில் சாதிக்க முடியவில்லை என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூறியிருந்தார்.
https://www.tamilarul.net/
வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. உள்ளூர் போட்டிகளிலும், இந்தியா ஏ அணிக்காகவும், ஐபிஎல் தொடரிலும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் இவர்களுக்கான இடம் காத்திருக்கிறது. இவர்களில் எவரேனும் ஒருவர் நம்பர் 4 இடத்துக்குத் தகுதியாக இருப்பார்களா என்று இந்திய அணி பரிசோதித்துப் பார்க்கும். ஷிகர் தவனும், விஜய் சங்கரும் உடல் தகுதிச் சோதனையில் தேர்வாகாவிட்டால் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான சமீபத்திய தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அடுத்த விக்கெட் கீப்பர் யார்?
மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அவரைப் பற்றி வெளியாகும் செய்திகள் அவர் எப்போது தனது ஓய்வை அறிவிப்பார் என்பதாகவே உள்ளன. அவர் தனது ஓய்வு குறித்து வாய் திறக்காவிட்டாலும் உலகக் கோப்பை தோல்வி, அவரது மோசமான ஃபார்ம், இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் எழுச்சி போன்ற காரணிகள் அவரை ஓய்வை நோக்கி உந்துகின்றன. தோனியின் பேட்டிங்கில் முன்பு இருந்த ஆக்ரோஷம் இப்போது இல்லை. அவரது நிதான ஆட்டமும் அனைத்து போட்டிகளிலும் எடுபடுவதில்லை. விக்கெட் கீப்பிங்கிலும் தடுமாற்றம் தெரிகிறது. முடிவுகள் மேற்கொள்வதிலும் பழைய தோனி இப்போது இல்லை.
ரிஷப் பந்த் இந்திய அணியின் வருங்கால நிரந்தர விக்கெட் கீப்பர் என்று ஆகிவிட்ட நிலையில் அவருக்கு வழிவிடுவதும், அவரை மெருகேற்றுவதும் தோனி கையில்தான் உள்ளது.
https://www.tamilarul.net/
இத்தொடரில் ரிஷப் பந்துக்கு தோனியின் ஆலோசனைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த உலகக் கோப்பை வரை விளையாடும் அளவுக்கு தோனிக்கு வயதும் பேட்டிங் ஃபார்மும் இடம் கொடுக்காது. அதேபோல, தோனி நிகழ்த்த வேண்டிய சாதனைகள் இன்னும் ஏதேனும் பாக்கி உள்ளதா?
50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என மூன்று முக்கிய கோப்பைகளை தோனி வென்றுவிட்டார். சிறந்த கேப்டன் என்பதையும் நிரூபித்துவிட்டார். உலகின் தலைசிறந்த கீப்பர் தோனிதான் என்பதிலும் சந்தேகமில்லை. பலமான இந்திய அணியையும் கட்டமைத்துவிட்டார். அயராது உழைத்த தோனி ஓய்வெடுக்க ஏன் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்?
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்க வாய்ப்பிருக்கும் நிலையில் தோனி அணியில் இடம்பெறவேண்டியது அவசியமாகும். ஆனால் இரண்டு மாதங்கள் தனக்கு ஓய்வு தேவை என்று இத்தொடரிலிருந்து தோனி தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். விராட் கோலி கேப்டனாக இருந்தாலும் தோனியின் பங்களிப்பும் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த உதவியாக உள்ளது. இதுபோன்ற சூழலில் தோனி தனக்கு ஓய்வு தேவை என்று கேட்டுள்ளதால், ரிஷப் பந்த் ஆஸ்தான விக்கெட் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார்.
https://www.tamilarul.net/
புதிய பந்துவீச்சுக் கூட்டணி
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது ஷமிக்கு இந்தத் தொடரிலிருந்து ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இவ்விருவருக்கும் இப்போது ஓய்வு தேவை. இவர்களுக்குப் பதிலாக, கலீல் அஹமது, நவ்தீப் சைனி, தீபக் சஹர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இம்மூவருமே ஐபிஎல் தொடரில் சிறப்பாகப் பந்துவீசினர். அடுத்த ஆண்டில் டி-20 உலகக் கோப்பை நடைபெறவிருக்கும் நிலையில் இவர்களைத் தயார்ப்படுத்த மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் தொடர் உதவியாக இருக்கும்.
டெஸ்ட் ஓப்பனர் யார்?
காயம், மோசமான ஃபார்ம் காரணமாக ஷிகர் தவனுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். அதேபோல முரளி விஜய்யும் சமீப காலமாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியுள்ளார். எனவே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அணியில் சேர்க்கப்பட்ட மாயங்க் அகர்வால் இந்தத் தொடரிலும் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. லோகேஷ் ராகுல் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் மற்றொரு தொடக்க வீரராக இருப்பார். மேற்குவங்க வீரரான பிரியங்க் பஞ்சாலுக்கும் தொடக்க வீரர் வாய்ப்பு வழங்கப்படலாம். ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து குணமாகி வரும் இளம் வீரர் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர் பந்தயத்துக்குத் தயாராக உள்ளார்.
டெஸ்ட் அணியில் தோனி இல்லை என்பதால் ரிஷப் பந்த் டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவரது ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. இருப்பினும் விருத்திமான் சாஹாவை மறந்துவிட முடியாது. தோனி ஓய்வுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக சாஹா விளையாடி வந்தார். 2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் காயம் காரணமாக சாஹா அணியிலிருந்து விலகினார். அதன் பின்னர் ரிஷப் பந்தின் ஆட்டம் சாஹாவின் பெயரை மறக்க வைத்துவிட்டது என்றே கூறலாம். காயத்திலிருந்து குணமாகியுள்ள சாஹாவுக்கு இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருமே முழுத் தகுதியுடன் இருப்பதால் விளையாடும் உத்தேச அணியில் யார் இடம்பெறுவார் என்று இன்றைய (ஜூலை 21) தேர்வுக் குழுக் கூட்டம் நிர்ணயிக்கும்.
தோனியின் எதிர்காலம் என்ன, நம்பர் 4 இடம் யாருக்கு, பிரதான விக்கெட் கீப்பர் யார், வேகப்பந்து வீச்சாளர் கூட்டணி எது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய அணித் தேர்வுக் கூட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும். இத்தொடரில் தோனி இல்லையென்றாலும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் அடுத்துவரும் தொடர்களில் தோனி அணியில் சேர்க்கப்படுவது சந்தேகம்தான். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோனியின் ஆட்டம் அவரது கடைசி ஒருநாள் போட்டியாகக் கூட இருக்கலாம்.
– செந்தில் குமரன்

Recommended For You

About the Author: Editor