சிபிஐ பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 2012ஆம் ஆண்டு
முதல் சுதாகர் ரெட்டி பதவியில் இருந்துவந்தார்.

மூன்றாவது முறையாக தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி வகித்து வந்த அவர், உடல்நிலையை காரணம் காட்டி பதவியிலிருந்து விலகினார்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்றும், இன்றும் டெல்லியிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் தேசியச் செயலாளராக பதவிவகித்துவந்த டி.ராஜாவின் பெயர் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டது.

இதனையடுத்து இன்று (ஜூலை 21) பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, “பொதுச் செயலாளராக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடும்.

மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை தொடர்ந்து எதிர்ப்போம். இடதுசாரி கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல முயற்சிகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டம் சித்தாதூரில் 1949ஆம் ஆண்டு பிறந்த டி.ராஜா பி.எஸ்சி, பி.எட் படித்துள்ளார். இளமைக் காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெருமன்றத்திலிருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ராஜா, இளைஞர் பெருமன்றத்தில் தமிழ் மாநிலச் செயலாளர், தேசியப் பொதுச் செயலாளராகவும் பதவிவகித்துள்ளார். 1994ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளராக இருந்துவந்தார்.

2007 ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் ஆங்கிலத்தில் தலித் கேள்விகள், வேலைவாய்ப்பு பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
டி.ராஜாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.இராஜா தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்கிறோம்.

வாழ்த்துகிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து மலர்ந்த கொள்கை வீரர் அவர். மிக சோதனையான அரசியல் அறைகூவல்கள் இப்போதுள்ள நிலையில், அவர் போன்ற துடிப்பும், துணிவும், தெளிவுமுள்ளவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைமைப் பொறுப்பேற்பது பெரிதும் வரவேற்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor