தம்மை வேறுபடுத்தி காட்ட முயன்றதாலே தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசல் – சி.வி!!

முஸ்லிம்கள் தங்களை தமிழர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்ட முற்பட்டதாலேயே தமிழ், முஸ்லிம் மக்கள் பிரியும் நிலை ஏற்பட்டதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி கண்ணகிபுரத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு காலத்தில் சகோதரத்துவம் நிலவி வந்தது. ஆனால் இன்று சந்தேக நிலைமையே இரு சமூகங்கள் மத்தியிலும் நிலவி வருகின்றது.

அதனை அரசாங்கமும் சரியான முறையில் பயன்படுத்தி சில காரியங்களை செய்துகொண்டதால் முஸ்லிம்களே செய்தார்கள் என தமிழர்கள் சிந்திக்கவும் தமிழர்களே செய்தனர் என முஸ்லிம்கள் சிந்திக்கவும் ஏற்ற வகையில் தமது இராணுவத்தை பயன்படுத்தி அரசாங்கம் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

இதன் காரணமாக தமிழ்,முஸ்லிம் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது. தற்போதைய நிலையில் ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர் முஸ்லிம் மக்களை நம்ப முடியாது என முழு இலங்கையிலும் அவர்களுக்கு எதிரான சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன” என மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Editor