எனக்கு இன்னொரு முகம் உண்டு

தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு சரியாக பணியாற்ற தவறிய தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 14,74,916 வாக்குகளை பெற்றது.

கட்சி தொடங்கி 14 மாதங்களில் 3.78 சதவீத வாக்குகளை பெற்று இருப்பதால் அக்கட்சியினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு கமல்ஹாசன் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அனைவருக்கும் மதிய விருந்து கொடுத்தார்.

இந்த விருந்தில் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் என சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கோவை, வடசென்னை, தென் சென்னை, மதுரை ஆகிய 4 தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளை தாண்டி கமல் கட்சி பெற்றுள்ளது.

11 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை அக்கட்சி பெற்றுள்ளது. நிறைய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி இருக்கிறது.

கமல்ஹாசனையும் இந்த தேர்தல் முடிவுகள் உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பின் தனது பொறுப்பு கூடியிருப்பதை அவர் உணர்ந்துள்ளார்.

ஆலோசனை கூட்டங்களில் கமல் பேசும்போது, நாம் நல்ல வாக்கு சதவீதம் பெற்று இருக்கிறோம். ஆனால் டெல்டா மாவட்டம், வடமாவட்டங்களில் வாக்குகளை மிகக் குறைவாகப் பெற்றுள்ளோம்.

அதற்கான காரணம் என்ன என்று ஆலோசிக்க வேண்டும். தேர்தல்தான் முடிந்துவிட்டதே… இனி அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் போனால் போதும் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். தினந்தோறும் மக்கள் பணி செய்யுங்கள்.

மக்களின் குறையைக் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் களத்தில் நில்லுங்கள். தொகுதிக்கு சென்று மக்கள் குறையைக் கேட்டு செய்யுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒதுங்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

மக்கள் கூப்பிடும் நேரத்திற்கு போய் குறைகளைக் கேளுங்கள். என்னை அதிகாலை 4 மணிக்கு அழைத்தாலும் வருவேன், இரவு 12 மணிக்கு அழைத்தாலும் வருவேன், அதுபோல் நீங்களும் மக்கள் பணிக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

இந்த தேர்தலில் நமக்குக் கிடைத்தது பெரிய வெற்றி தான். நம்பிக்கையுடன் மக்கள் பணியைத் தொடருங்கள். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வாய்ப்புகள் உண்டு என்றும் கூறினார்.

இந்த தேர்தலில் கடுமையாக வேலை செய்தது யார், ஓய்வு எடுத்தது யார், வேலை செய்யாமல் ஏமாற்றியது யார் என்பது எல்லாம் எனக்கு தெரியும். அவர்கள் பெயர்களை குறிப்பிட நான் விரும்பவில்லை.

இனியும் இப்படி இருக்கக்கூடாது. என்னுடைய ஒரு முகத்தைத்தான் பார்த்திருக்கிறீர்கள். இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்ததில்லை. அது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் முகம். நமது பொறுப்பு கூடியிருக்கிறது. 14 மாதத்தில் நம்மை மக்கள் இவ்வளவு வாக்குகள் கொடுத்து ஆதரித்திருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் நாமும் நடக்க வேண்டும். இல்லை என்றால் கட்சியில் இருந்து நீக்கவும் தயங்க மாட்டேன் என்று எச்சரித்தார்.

தலைமை நிர்வாகிகளுக்கு மட்டும் விருந்தா? என்று என்று யாரும் கேள்வி கேட்க வேண்டாம்.

விரைவில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் வர இருக்கிறேன். அப்போது ஆலோசனை கூட்டமும் விருந்தும் நடைபெறும். நிர்வாகிகள் பசியை மட்டும் அல்ல தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரும் பசி காத்திருக்கிறது. அதை தீர்க்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இனி என் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியும். தீவிரமாக கட்சி பணியாற்றுபவர்களுக்கு பரிசும் ஏமாற்றுபவர்களுக்கு தண்டனையும் உறுதி. மக்கள் நம் மீது வைத்த நம்பிக்கையை சரியாக பயன்படுத்தி அந்த நம்பிக்கையை அதிகமாக்க வேண்டும் இவ்வாறு கமல் பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.

தேர்தலுக்கு முன்னர் கமல்ஹாசனை சினிமாவில் இருந்து வந்து தோற்றுப்போன அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டார்கள். ஆனால் அவருக்கு செல்வாக்கு இருப்பதை அவர் நிரூபித்து விட்டார்.

ஜெயலலிதா போல கட்சியை நடத்துவதில் இனிதான் அவரது நிர்வாகத்திறமை தெரிய வரும். சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெல்லும் என்ற நம்பிக்கையும் உத்வேகமும் ஏற்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்


Recommended For You

About the Author: Editor