பிரித்தானியாவில் பெற்றோரிடம் இருந்து பறிக்கப்பட்ட குழந்தைகள்!

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜாஸ்மின் (சகீரா பானு அமகேதர்) மற்றும் அவரது கணவர் முகமது யூசுப் (50) பிரித்தானியாவில் வாழ்ந்த நிலையில், குழந்தைகள் இல்லாமல் தவித்த இத் தம்பதியினருக்கு 13 வருடங்களுக்கு பின்னர் ஒரு மகனும், மகளும் பிறந்துள்ளனர்.

இந்நிலையில் பெரும் மகிழ்ச்சியில் இருந்த வேளை அடுத்தடுத்து சோதனைகளும் ஆரம்பமாகியுள்ளது.

பிரித்தானியாவில் பீட்சா கடையில் வேலை செய்து வந்த முகமது யூசுப் 2013 ஏப்ரல் மாதம் தன்னுடைய வேலையை இழந்துள்ளார்.

அந்த சமயத்தில் முகமது மற்றும் ஜாஸ்மின் வாரத்திற்கு 70 பவுண்டுகள் அரசிடம் இருந்து பண உதவியாகப் பெற்றுக் கொண்டிருந்தனர். இந்த பணம் 2015 ஆம் ஆண்டில் ரூ.7,000 க்கும் குறைவானது ஆகும்.

இதனால் தங்கடைய இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து இன்னும் 70 பவுண்டுகள் அதிகமாக வேண்டும் என கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள் குழந்தைகளை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள்னர். அதேசமயம் அந்த தம்பதியினரின் விசா காலமும் முடிவடைந்துள்ளது.

மேலும், ஆகஸ்ட் 2015 இல், பர்மிங்காம் நகர கவுன்சில் இரண்டு குழந்தைகளையும் பெற்றோரிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்றது.

முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு குழந்தைகளும் பாகிஸ்தான் முஸ்லீம் குடும்பத்தில் தற்போது வளர்ந்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 18, 2015-ல் ஒரு ஒப்பந்தத்தில் தம்பதிகளை கையெழுத்திடுமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த ஒப்பந்தத்தில், குழந்தைகளை சந்திக்கும் போது உள்ளூர் அதிகாரிகளை பற்றி பொருத்தமற்ற கருத்துக்களை கூறக்கூடாது மற்றும் அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்வது பற்றிய உரையாடல்களில் ஈடுபட கூடாது என நிபந்தனைகள் விதித்திருந்தனர்.

இதனை படித்து பார்த்த முகமது, தன்னுடைய சொந்த குழந்தைகளை பார்ப்பதற்கு எதற்கு இத்தனை நிபந்தனைகள்? சமூக சேவையாளர்கள் எங்களுடைய குழந்தைகளை நிரந்தரமாக வைத்திருக்க முயற்சி செய்கின்றதாக கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார்.

இதனால் முகமது மற்றும் ஜாஸ்மின் தம்பதியினர் குழந்தைகள் சந்தித்து 4 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. குழந்தைகள் பிரிக்கப்பட்ட போது ஜாஸ்மின் தன்னுடைய வயிற்றில் மூன்றாவது குழந்தையை சுமந்து கொண்டிருந்தார். இந்நிலையில் குழந்தை பிறந்த பின்னர் அந்த குழந்தையும் தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில், ஜாஸ்மின் பிரித்தானியாவில் இருந்து வெளியேறி சிங்கப்பூரில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அவருடைய கணவர் முகமது மட்டும் பிரித்தானியாவில் தங்கி குழந்தைகளை மீட்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கணவருக்கு ஜாஸ்மின் வழக்கு நடத்துவதற்கு தேவையான பணத்தை சிங்கப்பூரில் இருந்து அனுப்பி கொண்டிருக்கிறார்.

அத்துடன் நாகப்பட்டினத்தில் சொந்தமாக மரக்கடை வைத்திருக்கும் குழந்தைகளின் மாமா அப்துல் லத்தீப், தம்பதியினருக்கு உதவ முன்வந்துள்ளார். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் சேர்த்து மேலும் இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்கான போதிய வருமானம் எனக்கு கிடைக்கிறது என பர்மிங்காம் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.

அதனை ஏற்ற அதிகாரிகள் இலங்கை தமிழர் ஒருவரை மொழி பெயர்ப்பாளராக பயன்படுத்தி அப்துல் லத்தீப்பை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அப்துல் லத்தீப் கூறியதை அவர் சரியாக மொழிபெயர்த்து அதிகாரியிடம் கூறாததால் குழந்தைகளை ஒப்படைக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதற்கிடையில் நாகபட்டினத்தை சேர்ந்த குழந்தைகள் மற்றும் சமூல நல ஆர்வலர்கள், இது ஒரு மனித உரிமை மீறல். குழந்தைகள் முஸ்லீம் குடும்பத்தில் வளர்ந்தாலும் கூட, பாகிஸ்தானிற்கும் எங்களுடைய கலாச்சாரத்திற்கும் அதிக வித்யாசங்கள் உள்ளதாக பிரித்தானிய அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியிருந்த போதும், அதனையும் அதிகாரிகள் புறக்கணித்துள்ள நிலையில் குறித்த தம்பதியினர் பெரும் மன வேதனையில் உள்ளனர்.

மேலும் குழந்தைகளை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்து வருகின்ற அதேசமயம் மூன்றாவது குழந்தையுடன் சிங்கப்பூரில் வசித்து வரும் ஜாஸ்மின் நள்ளிரவில் திடீரென எழுந்து குழந்தைகளை பற்றியே பேசிக்கொண்டிருப்பதாக அவருடைய சகோதரி தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor