நடு இரவில் ஓடிய மாவை!!

திருமணமொன்றில் சாட்சிக் கையெழுத்து வைக்க கல்முனைக்கு சென்றுள்ள மாவை சேனாதிராசா, நேற்று கல்முனையில் கட்சி தரப்பினரை சந்தித்தபோது பலத்த எதிர்ப்பை சந்தித்தார் என்பதையும், அம்பாறையின் தமிழ் அரசுக்கட்சியின் பிரமுகர்கள் அனைவரும் இந்த சந்திப்பை கூட்டாக தவிர்த்தனர்.

அம்பாறை தொகுதி தமிழ் அரசு கட்சி தலைவர் இராஜேஸ்வரன், சம்மாந்துறை தொகுதி தமிழ் அரசு கட்சி தலைவர் கலையரசன் உள்ளிட்டவர்களை தவித்து ஆயுதக் குழுவுடன் மாவை சந்திப்பினை ஏற்படுத்தியதன் காரணமாக நேற்றைய சந்திப்பை தவிர்த்தனர்.

கல்முனையிலுள்ள மக்கள் மீட்பு படை என்ற அமைப்பின் கணேசானந்தன் என்பவரின் திருமணம் இன்று நடைபெறுகிறது இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புக்கள் இருந்தும் அவ் ஆசனம் கிடைக்கக் கூடாது என்பதில் ரெலோவுடன் இணைந்து வேலை செய்தவர் என்பதுடன் ஐ.நா வரை சென்று தமிழர்களின் உரிமைக்கு எதிராக தமிழரசுக் கட்சி செயற்படுகிறது என வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து தமிழ் தேசய மக்கள் முன்னணியின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் கணேசின் பின்னால் மாவை செல்வது தமிழ் அரசு கட்சியின் ஆதரவாளர்கள் இடையில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்முனையிலுள்ள அசெம்பிளி ஒப் கோட் வணக்கதலத்தில் நடக்கும் பதிவு திருமணத்தில் சாட்சி கையொப்பமிடுகிறார் மாவை. பின்னர் சம்மாந்துறை மண்டபத்தில் திருமணம் இடம்பெறும்.

திருமண நிகழ்வையொட்டி கல்முனைக்கு சென்ற மாவை, நேற்று அங்கு கட்சி சார்பானவர்களை சந்திக்க முடிவு செய்திருந்தார். இந்த ஏற்பாடுகளை அம்பாறை எம்.பி கோடீஸ்வரனே மேற்கொண்டார்.

அவர், மாவட்டத்தின் தமிழ் அரசு கட்சியினருக்கு அழைப்பு விடுத்தபோது, மாவட்ட தலைவர்கள் அதை ஏற்கவில்லை.

எமது கட்சி தலைவரின் மாவட்ட விஜயம் எமக்கு தெரியாமல், ரெலோ பிரதிநிதியான உங்கள் மூலமாகவா நடப்பது?, மாவை ரெலோவிற்கு மாறி விட்டாரா என அவர்கள் நேரடியாக கோடீஸ்வரனிடம் கேட்டுள்ளனர்.

நேற்று கல்முனை சுமங்கலி கூட்டுறவு மண்டபத்தில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தின் தமிழ் அரசு கட்சியினர், கோடீஸ்வரனின் ஆதரவாளர்கள் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதில் அம்பாறை தமிழ் அரசு பிரமுகர்கள் கலந்துகொள்ளவில்லை. கல்முனையில் எம்.ஏ.சுமந்திரனிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில், கோடீஸ்வரனின் ஆதரவாளர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற அதிருப்தி மாவட்ட தமிழ் அரசு கட்சியினரிடம் இருப்பதாக தெரிகிறது.

நேற்றைய சந்திப்பில் கலந்துகொள்ள பலர் வந்தபோதும், அதில் குறிப்பிடத்தக்களவானர்களே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கோடீஸ்வரனின் ஆதரவாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர், கல்முனை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கேள்வியெழுப்ப சென்ற தம்மை உள்ளே அனுமதிக்கவில்லையென ஒரு பகுதியினர் மண்டபத்திற்கு வெளியில் அதிருப்தி தெரிவித்தனர்.

கூட்டம் ஆரம்பித்ததும், மாவையை சங்கடப்படுத்தும் விதமாக கேள்விகள் கேட்கப்பட்டன. பொறுங்கள் தம்பி, பார்ப்போம் தம்பி என மாவை தனது பாணியில் பதிலளித்துக் கொண்டிருக்க, கொதிப்பான இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர்.

உங்களை அரசு ஏமாற்றுகிறது, நீங்கள் கல்முனை மக்களை ஏமாற்றுகிறீர்கள் என ஒருவர் குற்றம்சுமத்தினார்.

கடந்த நான்கரை வருடங்களில் தமிழ் மக்களிற்கு செய்த ஒரு உருப்படியான விசயத்தை சொல்லுங்கள் என இன்னொருவர் கேள்வியெழுப்பினார்.

இப்படி சூடான கேள்விகள் எழுந்ததால் திண்டாடிய மாவை, வரும் புதன்கிழமை வரை பொறுமை காக்கும் வரையும், அதற்குள் கல்முனையில் கணக்காளர் நியமனம் மேற்கொள்ள நடவடிக்கையெடுப்பதாக மாவை தெரிவித்தார்.

இதற்கும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீங்கள் நாளை (இன்று) திருமணத்திற்கு செல்வதற்காக இப்படி சொல்வீர்கள். புதன்கிழமை கல்முனைக்கு வருவீர்களா என கேள்வியெழுப்பினர்.

இதற்குள், மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படாதவர்கள் மாவையை மறித்து கேள்வியெழுப்ப வேண்டுமென திட்டமிட்டு, நற்பிட்டிமுனை சந்தியில் ஒன்று கூடினர்.

இந்த தகவல் தெரிந்ததால், அந்த வழியால் செல்வதை மாவை தவிர்த்தார். நேற்றிரவு மாவை சேனாதிராசா தங்குவதற்கு கல்முனையில் ஹோட்டல் ஒன்றில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தபோதும், கல்முனை விவகாரத்தில் பொதமக்கள் விடுதியையும் முற்றுகையிடலாமென்பதால் மாற்று வழியொன்றினால் களுவாஞ்சிக்குடிக்கு மாவை அனுப்பி வைக்கப்பட்டார்.

இன்று காலையில் பதிவு திருமணத்தில் கலந்துகொள்ளும் மாவை, பின்னர் மட்டக்களப்பு தமிழ் அரசு கட்சி பிரமுகர்களை சந்திக்கிறார்.


Recommended For You

About the Author: Editor